30
 

71. பரனாய்ப் பராபரங்1 காட்டி உலகின்
தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்து
அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கு நந்தி
உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே.

(ப. இ.) சிவபெருமான் விழுமிய முழுமுதலாம் பரனாய் நின்று தன் திருவடியான் உணரப்படும் உவமையிலாக் கலைஞானமாகிய அபரமும் மெய்ஞ்ஞானமாகிய பரமும் முறையே சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானத்தார்க்கும், பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானத்தார்க்கும் நீங்காது உடனாய் நிறைந்து அருளிச் செய்தனன். அங்ஙனம் அருளிச் செய்து உலகினில் சிவபுண்ணியங்களுள் எல்லாம் மேலானது சிவ வழி பாடாகிய பூசையாகும். அச் சிவபுண்ணியத்தைத் தானே செய்து காட்டும் வழி காட்டியாய் முன்னின்று திருவிடைமருதூரில் தானே தன்னை வழிபட்டுங் காட்டியருளினன். அம் முறையான் சிவவுலகத்தவர் வழிபாடும் புரிவாராயினர். அவர்களால் வழிபடப்படும் நந்தியும் அவர்கட்கு உறுதியளித்தருளும்படி ஆகமமாக ஓங்கி நின்றருளினன். 'ஆகமம் ஆகிநின்றண்ணிப்பான் தாள்வாழ்க' என்பதும் இவ்வுண்மையை வலியுறுத்தும்.

(அ. சி.) தரன் - பரிபாலிப்பவன். உரனாகி - திண்மையுடையவனாகி.

(4)

72. சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமம்எங்கள் நந்திபெற் றானே.

(ப. இ.) சிவம் என்று சொல்லப்படும் மேலாம் பொருளினிடத்துத் திருவருளால் அன்னையாகிய சத்தியும், அச் சத்தியினிடத்திருந்து அருளோனாகிய சதாசிவனும், சதாசிவத்தினின்று ஆண்டானாகிய மகசேனும், அம் மகேசனினின்று ஆசானாகிய நந்தியங்கடவுளும், அரன், அரி, அயன் என்னும் இவர்கள் தங்களுக்குள்ளே பெற்ற சிவாகமங்கள் ஒன்பதும் என்ப. அவை முற்றும் எங்கள் ஆசானாம் நந்தியங்கடவுள் பெற்றனர் என்ப. உவமாமகேசர் - இரண்டு மகேசர். அவ்விருவரும் ஆண்டான் ஆசான் எனப்படுவர்.

(5)

73. பெற்றநல் ஆகமம் காரணங் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரந்
துற்றநற் சுப்பிரஞ் சொல்லு மகுடமே.

(ப. இ.) மேலோதியவாறுள்ள சிவாகமங்கள் ஒன்பதின் திருப் பெயர்கள் வருமாறு: 1. காரணம், 2. காமிகம், 3. வீரம், 4. சிந்தம், 5. வாதுளம், 6. வியாமளம், 7. காலோத்தரம், 8. சுப்பிரம், 9, மகுடம் என்பன.

(6)


1. சிவனடியே. 12. சம்பந்தர், 70.