185. சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி வந்திப் பதுநந்தி நாமம்என் வாய்மையால் புந்திக்குள் நிற்பது நந்திபொற் போதமே.1 (ப. இ.) நல்லார் இணக்கத்தால் நாளும் நாம் உளங்கொண்டு நேர்வது திருத்தாளிணையாகிய திருவருளே. அத் திருவருள் துணையால் உணர்வின்கண் ஓவாது நாடுவது சிவபெருமானின் திருமேனியாகிய திருவைந்தெழுத்தே வாயாரப் புகழ்வது நன்னெறி நான்மைக்கும் வாய்ப்ப அமைந்த திருவைந்தெழுத்தேயாம். நான்மை என்பது சீலம் நோன்பு செறிவு அறிவு என்பதாம். இவற்றிக்கு முறையே நமசிவய, சிவயநம, சிவயசிவ, சிவசிவ என்னும் திருவைந்தெழுத்துக்களேயாம். இத் திருவைந்தெழுத்தின் தெளிவாகிய சிவஞானபோதமே நந்தி பொற்போதமாகும். அப் போதமே நம் உணர்வுக்குள் உணர்வாய் நம் அறிவினுள் நிலைபெறுவதாகும். (அ. சி.) நந்திநாமம் - அஞ்செழுத்து. பொற்போதம் - பொன் போன்ற சிவஞானபோதச் சூத்திரங்கள் பன்னிரண்டுமே. (29) 186. போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்2 போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார் நாதன் நடத்தால்3 நயனங் களிகூர வேதந் துதித்திடப் போயடைந் தார்விண்ணே. (ப. இ.) சிவஞான போதத்தைச் செந்தமிழால் அருள்செய் தளிக்க நிற்பவன் நம் தவப்பேறாகிய புண்ணிய நந்தி. அவனருளால் ஆருயிர் உணர்வில் அகந்தழீஇ வைத்த புண்ணியராயினார். அனைத்துயிரானும் நத்தும் தன்மையராவர். அவர்கள் நாதன் என்னும் திருப்பெயர் பூண்டனர். அகம்புறம் காண்பார் காட்சிக் கண்கள் மிகவும் களிப்பினை எய்தச் செந்தமிழ்த் திருமறை போற்றினர். தூயவிண்ணாகிய சிவவுலகினை அடைந்தனர். வேதம் - இறைவன் நூல். இதன்கண் அடைந்தார் என்பதனால் உண்மையும், போதம் என்பதனால் அறிவும், களிகூர என்பதனால் இன்பமும் பெறப்படும். எனவே ஆவி எய்தும் 'உண்மை அறிவு இன்ப' உயர்வற உயர்ந்த ஒண்மை வண்மைச் சிவன்நிலை பெறப்படும். (அ. சி.) போத நந்தியை - தமிழ்ச் சிவஞானபோதப் பன்னிரண்டு சூத்திரங்களையும் உபதேசித்த நந்தியை. போதந்தனில் தெளிந்த சிந்தையினிடத்து. (30)
1. பரஞானத் சிவஞானசித்தியார், 11 - 2. 2. முந்தி. அப்பர், 6. 44 - 5. 3. எட்டு. ஆடும். சேர்க்கும், உண்மை விளக்கம், 32 - 4. 4.ஏற்ற தொண்டரை. 12. வெள்ளானை, 34.
|