1002
 

(ப. இ.) செயலறலாகிய துரியம் அடங்கிய நிலையினைச் சொல்லறும் பாழென்பர். சொல்லறல் - சொல்ல முடியாதாதல். அப் பாழை அறிவிலாதார் அறிதற்கரிய பெரும் பொருட்குப் பெரும் பொருளாம் பரம்பரன் என்பார்கள். அப் பாழ் அறிதற்கரிய பரம்பரம் என்றே துதிக்கும் அருளார் அருநிலமாகும். இவ் வுண்மையினை அறிவார் யார்? ஒரு சிலரே என்க. அருநிலம் - அப்பாலிடம் ; துரியாதீதம்.

(அ. சி.) ஆதர் - அறிவு இல்லாதவர். அருநிலம் - துரியாதீதம்.

(4)

2460. ஆறாறு நீங்க நமவாதி யகன்றிட்டு
வேறா கியபரை யாவென்று மெய்ப்பரன்
ஈறான வாசியிற் கூட்டு மதுவன்றோ
தேறாச் சிவாய நமவெனத் தேறிலே.

(ப. இ.) அருஞ்சைவர் மெய் (2139) முப்பத்தாறென்ப. இம் முப்பத்தாறன் உண்மையினை உணர்தற்கு 'நமசிவய' என்னும் செந்தமிழ்த் திருவைந்தெழுத்தினைத் திருவருளால் தேர்தல் வேண்டும். தேருங்கால் ஒருபுடை யொப்பாக 'நகரம்' உணர்த்து மெய் ஐந்தனுள் ஆசான், ஆண்டான், அருளோன் என்னும் மெய் மூன்றாகும். 'மகரம்' உடன் மெய் இருபத்து நான்குமாகும். 'சிகரம்' அத்தன் மெய்யாகும். 'வகரம்' அன்னை மெய்யாகும். 'யகரம்' ஆள்மெய்யாகும். இவ்வாறாறு மெய்யும் உண்மைகண்டு அகலுங்கால் அவ் வாய்வின் மறையாம 'நமசிவய' வும் அகலும். சிறப்பாகிய பரை என்னும் திருவருள் 'யா' வென்று நிற்கும். யாவென நிற்பதாவது ஆருயிர்க்கு மருள் உடல் நீங்கி நகரமாகிய ஆதி அருள் உடல் ஆங்கமையும். மெய்ப்பரனாகிய சிகரத்தின் ஈறான வகரத்தில் யகரம் கூட்டப் பெறும். அப்பொழுது உணர்தற்கரிய 'சிவயநம' என அமையும். இதனை அருளால் தெளிதல் சிறப்புடைத்தாகும். 'நமசிவய' என்பதன் கண்ணுள்ள யகரம் நம என்பனவற்றைக் கடந்து நிற்கும் நிலையே 'சிவயநம' வாகும். 'ய'கரம் மறையாதலின் 'யா' என நீண்டு நின்றது. இம் மறையின் மாண்பை வருமாறு நினைவுகூர்க :

'நாடும் நமசிவய நல்ல சிவயநம
கூடும் சிவயசிவ கூறிமேல் - நாடும்
சிவசிவஎன் றெண்ணுவர்நற் சீலமுதல் நான்கின்
தவநெறிசார் செந்தமிழர் தாம்.'

(அ. சி.) பரை - சத்தி. ஆவென்று - பசுவென்று. பரன் - சிவன். தேறில் - ஆராய்ந்தால்.

(5)

2461. உள்ளம் உருவென்றும் உருவம் உளமென்றும்
உள்ள பரிசறிந் தோரு மவர்கட்குப்
பள்ளமும் இல்லை திடரில்லை பாழில்லை
உள்ளமும் இல்லை உருவில்லை 1தானன்றே.

(ப. இ.) உருவாகிய உடலினையே உள்ளமாகிய உயிர் என்றும், உயிரையே உடலென்றும் தடுமாறிக் கூறுவர். அது கலப்பால் ஒன்று


1. கட்டும். சிவஞானபோதம், 2. 1 - 1.