பட்டுப் புணர்ந்து நிற்கும் நிலைமையால் கூறப்படுவதாகும். இவ்வுண்மையினை அருளால் உள்ளவாறு ஓர்ந்துணர்வார்கட்குப் பள்ளமாகிய கருப்பையினுட் புக்கு உருப்பெற்றுத் தோன்றி உழலுமாறில்லை. திடராகிய உலகினில் உறைந்து நிலவுமாறுமின்று. பாழாகிய உருவற்ற நிலையில் வீழ்ந்து ஆழுமாறும் இன்று. ஆகவே உயிர் உடல் என்ற வேறுபாட்டு உரை உண்டாவதில்லை. (அ. சி.) உள்ள பரிசு - உண்மையான தன்மை. பள்ளம் - கருப்பாசயம். திடர் - உலகம். (6) 18. காரிய காரண வுபாதி 2462. செற்றிடுஞ் சீவ வுபாதித் திறனேழும் பற்றும் பரோபாதி ஏழும் பகருரை உற்றிடுங் காரிய காரணத் தோடற அற்றிட வச்சிவ மாகும் 1அணுவனே. (ப. இ.) முன் (2456) ஓதிய திருப்பாட்டின்கண் காரிய உபாதியாகிய சீவஉபாதி ஏழும் காரண உபாதியாகிய அருளுபாதி ஏழும் உள்ளவிடத்துத் தோன்றும் உபாதியாகிய வருத்தமும், அதனைச் சுட்டும் பெயர்களும் முற்றும் தோன்றாவாறு அற்றொழிதல் வேண்டும். அற்றொழிந்த விடத்து அவ்வணுவாகிய ஆருயிர் பற்றற்றார்க்கு என்றும் வற்றாப் பற்றாய் நிற்கும் பரசிவத்தின் அடியிணையைச் சாரும். சாரவே அச் சிவமாக நிற்கும். (அ. சி.) சீவ உபாதி - காரிய உபாதிகள். பரோபாதி - காரண உபாதிகள். அணுவன் - சீவன். (1) 2463. ஆறாறு காரியோ பாதி யகன்றிட்டு வேறாய் நனவு மிகுத்த கனாநனா ஆறா றகன்ற சுழுத்தி யதில்எய்தாப் பேறா நிலத்துயிர் தொம்பதம் பேசிலே. (ப. இ.) திருவருள் நினைவால் முப்பத்தாறு மெய்களால் ஏற்படும் காரியவருத்தம் என்னும் உபாதிகள் நீங்கும் நீங்கவே சிறப்பு நனவாய் மிகுத்த கனவின்கண் நிகழும் நனவும் உண்டாம். அதுபோல் ஆறாறு நீங்கிய உறக்கம் வந்துறும். அவ் வுறக்கமும் எய்தாத நிலைபெற்ற பேறாகிய திருவடியின்கண் சார்ந்து தொம்பதப் பொருளாகிய ஆருயிர் இன்புறும் பேசுமிடத்து இதுவே திருவடிப் பேறாகிய நிலம் என்ப. (அ. சி) கனா நனா - கனவில் நனவு. பேறாநிலம் - முத்தி. (2) 2464. உயிர்க்குயி ராகி யொழிவற் றழிவற்று அயிர்ப்பறு காரணோ பாதி விதிரேகத்து உயிர்ப்புறும் ஈசன் உபமிதத் தாலன்றி வியர்ப்புறும் ஆணவம் வீடல்செய் யாவே.
1. கண்ட சிவஞானபோதம், 2. 3 - 1.
|