2481. போற்றியென் றேன்எந்தை பொன்னான சேவடி ஏற்றியே 1தென்றும் எறிமணி தானகக் காற்றின் விளக்கது காய மயக்குறும் ஆற்றலுங் கேட்டது மன்றுகண் டேனன்றே. (ப. இ.) எந்தையாகிய சிவபெருமானின் பொன்னான திருவடியைப் போற்றி என்று வழுத்தினேன். போற்றி - காத்தருள்வாயாக. இஃது இகரஈற்று வியங்கோள் பின்பு திருவடியினை ஏற்றுதலாகிய பரவுதலைச் செய்தேன். செய்யவே அகத்தே ஓர் ஓசை உண்டாயிற்று. அவ்வோசை உயிர்ப்புப் பயிற்சியால் அகத்துத் தொடர்ந்து எழும் அடிக்கும் மணியோசையாகும். அகவிளக்காய்த் தோன்றும் அவ்வோசை உடம்பெங்கணும் கலந்துநிற்கும். அத் தன்மையினையும் அதனால் விளங்கும் அருளாற்றலையும் அந்நாள் கண்டேன் என்க. (அ. சி.) அகக்காற்றின் விளக்கது - பிராண வாயுவினால் விளங்கும். கேட்டதும் - மணி ஓசையைக் கேட்டதும். (10) 2482. நேடிக்கொண் டென்னுள்ளே நேர்தரு நந்தியை ஊடுபுக் காரும் உணர்ந்தறி வாரில்லை கூடுபுக் கேறலுற் றேனவன் கோலங்கண் மூடிக்கண் டேனுல கேழுங்கண் 2டேனன்றே. (ப. இ.) அடியேன் இருக்குமிடந் தேடிக்கொண்டு அடியேன் அகத் தாமரையினுள்ளே நேர்ந்து எழுந்தருளும் நந்தியை உள்ளே புகுந்து யாரும் உணர்ந்தறிவாரில்லை. என்னுடைய நெஞ்சினுள் நினைப்பை யானே அறிவதுபோல் என்னுள் நிற்கும் சிவபெருமானை யானே அறிகுவன். கூடியிருக்கும் உச்சித்துளை சென்று அகத்தவத்தால் ஏறினேன். அங்கு நன்மையே வடிவமான சிவபெருமானைக் கண்டேன். அவன் திருக்கோலங்களையுங் கண்டேன். கண்டு 'சிக்கெனப் பிடித்தேன்' என்பதுபோல் இடையறா நாட்டத்தால் தாள்தளையிடுதலாகிய மூடுதலைச் செய்தேன். அக் காட்சியினால் உலகு ஏழினையும் ஆடிநிழல்போல் என்னுள்ளே நிலவக் கண்டேன். (அ. சி.) நேடி - தேடி. நேர்தரு - எதிர்ப்பட்ட. ஊடு - உள்ளே. கூடு - பிரமரந்திரம். மூடிக் கண்டேன் -என்னுள் அடக்கிக்கண்டேன். (11) 2483. ஆன புகழும் அமைந்ததோர் ஞானமுந் தேனு மிருக்குஞ் சிறுவரை யொன்றுகண்டு ஊனமொன் றின்றி யுணர்வுசெய் வார்கட்கு வானகஞ் செய்யு மறவனு 3மாகுமே.
(பாடம்) 1. சென்றும். 2. அரக்கொடு. சிவஞானபோதம், 2. 1 - 4. " சூரியகாந். சிவஞானசித்தியார், 8. 2 - 18. " தேடிக். அப்பர், 4. 9 - 12. 3. துறவி." 5. 22 - 6. " மறமானம். திருக்குறள், 766.
|