1025
 

2511. ஆசூச மில்லை அருநிய மத்தருக்கு
ஆசூச மில்லை அரனைஅர்ச் சிப்பவர்க்கு
ஆசூச மில்லையாம் அங்கி வளர்ப்போருக்கு
ஆசூச மில்லை அருமறை ஞானிக்கே.

(ப. இ.) மேலோதிய மெய்ம்மையினை அருளானறிந்தவர் தீண்டாமை என்னும் தீட்டு யாண்டும் உண்டெனக் கூறவும் உளம் கூசுவர். இத் தீட்டுச் செந்நெறி நான்மையின் முதற்படியாம் அருநிமயத்தர் என்னும் சீலத்தார்க்கும் கிடையாது. அதுபோல் அரனை அருச்சிப்பாராகிய நோன்பினர்க்கும் இல்லை. அங்கி என்னும் திருவைந்தெழுத்தால் அகத்தழல் ஓம்பும் செறிவினர்க்கும் இல்லை. அருமறையாகிய 'சிவசிவ' என்னும் நான்மறை நவிலும் நல்லாராம் அறிவினர்க்கும் நண்ணும் தீட்டு நாளும் இல்லை. அறிவினர் - திருவடியுணர்வினர்.

(6)

2512. வழிபட்டு நின்று வணங்கு மவர்க்குச்
சுழிபட்டு நின்றதோர் தூய்மை தொடங்குங்
குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள்
கழிபட் டவர்க்கன்றிக் காணவொண் ணாதே.

(ப. இ.) செந்நெறி முதல்வர் நம்மூலரும், நால்வரும், சித்தாந்த முதல்வர் நால்வரும் அருளிச்செய்த திருமறை திருமுறையாகிய முறையே புகழ்நூல் பொருள் நூல்களை ஓதி வழிபட்டுநின்று விழுமிய முழுமுதல்வனாம் எட்டுவான் குணத்து இறைவனை வணங்குவார்க்கு அம்முறைகள் மறிக்கப்பட்டுச் சுழியில் வீழ்த்துவதொத்த மனம் வழிப்பட்டுச் சிவபெருமான் திருவடியிணையினையே ஒருவாது அருளால் நினையும் தூய்மைக்குத் துணையாகும். அதனால் திருவடியுணர்வு தொடங்குவதாகும். இந் நன்னெறி வாராது பிறவிக்குழியிற் பட்டுழலும் புன்னெறியிற் செல்லும் தின்மையோர் சிறப்பருளும் சிவபெருமானின் திருவெண்ணீறு, சிவமணி, திருவைந்தெழுத்து மூன்றும் முறையே உடல் உள்ளம் உணர்வு எனக் கருதச் செய்யும் திருக்குறியினைக் கைக்கொள்ளார். மனவடக்கம் உடையார்க்கின்றி மற்றவர்கட்குச் சிவபெருமானைக் காணவொண்ணாதென்க.

(அ. சி.) சுழிபட்டு - மனம் அடங்கி. குழிபட்டு - கருக்குழியை நினைந்து. குறிகள் - சிவக்குறிகள். கழிபட்டவர் - மனம் அடங்கினவர்.

(7)

2513. தூய்மணி தூயனல் தூய ஒளிவிடுந்
தூய்மணி தூயனல் தூரறி வாரில்லை
தூய்மணி தூயனல் தூரறி வார்கட்குத்
தூய்மணி தூயனல் தூயவு மாகுமே.

(ப. இ.) தூய்மணியாகிய செம்மணி சிவபெருமான். தூய அனல் புறத்தனலுக்கு முதலாய் அகத்தனலாய்நிற்கும் ஒளி என்னும் பூத முதலாம் தன்மாத்திரையாகும். புறத்தனல் தீயாகும். இவ் விரண்டின் முதலாகிய பாய அருளையும் தூயமாயையும் அருளால் அறிவார் பலரில்லை. தூர்: மூலம்;