1033
 

2527. ஆறா றகன்ற அணுத்தொம் பதஞ்சுத்தம்
ஈறான தற்பதம் எய்துப சாந்தத்துப்
பேறா கியசீவன் நீங்கிப்பிர சாதத்து
வீறான தொந்தத் தசிதத்வ மசியே.

(ப. இ.) அருஞ்சைவர் (2139) தத்துவம் ஆறாறும் நாமல்ல நம்முரிமையுமல்ல என வுணர்ந்து பற்றறல் உண்மைகாண் சுத்தமாகும். இந்நிலை தொம்பதச் சுத்தம் என்ப. ஒழிவொடுக்கத்துத் தற்பத உண்மையாகும். திருவடிப் பேற்றினுக்குரிய ஆருயிர் இவற்றினின்றும் அகன்று சிவகுருவின் அருட் கொடையால் சிறப்பான நீ அது ஆகின்றாய் என்பதே தத்துவமசி என்னும் சொல்லுக்குரிய செம்பொருளாகும்.

(அ. சி.) சீவன் நீங்கி - பசுத்துவம் ஒழிந்து. பிரசாதத்து - குருவின் கருணையால்.

(2)

2528. துவந்தத் தசியே தொந்தத் தசியும்
அவைமன்னா வந்து வயத்தேக மான
தவமுறு தத்துவ மசிவே தாந்த
சிவமா மதுஞ்சித் தாந்தவே தாந்தமே.

(ப. இ.) துவந் தத் அசி என்னும் சொல்லே தொந்தத்தசியாம். அவற்றின் பொருள் உண்மைநிலை பெறுதற் பொருட்டு வந்த தன்மையுடையது இவ் வுடம்பாகும். பெருமைமிக்க தவக்குறிப்பாம் தத்துவமசி வேதாந்த விளக்கமாகும். 'சிவயநம' என்பது சித்தாந்த விளக்கமாகும். சித்தாந்த வேதாந்தம் இரண்டும் (2346) செம்பொருளே.

(3)

2529. தொம்பதந் தற்பதஞ் சொல்லும் அசிபதம்
நம்பிய முத்துரி யத்துமே னாடவே
யும்பத 1மும்பத மாகும் உயிர்பரன்
செம்பொரு ளான சிவமென லாகுமே.

(ப. இ.) தொம்பதம் தற்பதம் சொல்லப்படும் அசிபதம் மேலோதிய வாறு சீவதுரியம், பரதுரியம், சிவதுரியம் என முத்துரியமாகும். பொருந்தும் முப்பதமும் உயிர் அருள் செம்பொருளான சிவம் எனச் சிறப்புறச் சொல்லலும் ஆகும்.

(4)

2530. வைத்த துரிய மதிற்சொரு பானந்தத்து
உய்த்த பிரணவ மாமுப தேசத்தை
மெய்த்த விதயத்து விட்டிடு மெய்யுணர்
வைத்த படியே யடைந்துநின் றானன்றே.

(ப. இ.) மூவகையான் மேலோதி அமைத்த துரியத்தின்கண் உண்மை அறிவின்பமாகிய சொருபானந்தத்து உய்ப்பது ஓமொழி மறை என்க. அம் மறையினை ஏனைய நினைவுகளை விட்டிடப் பயின்ற வுள்ளத்து


(பாடம்) 1. முப்பத.