2607. மாயை யிரண்டு மறைக்க மறைவுறுங் காயமோ ரைந்துங் கழியத்தா னாகியே தூய பரஞ்சுடர் தோன்றச் சொரூபத்துள் ஆய்பவர் ஞானாதி மோனத்த ராகுமே. (ப. இ. ஆருயிர்கட்கு அமைந்த உடல்மெய் உணர்வுமெய் என்னும் மெய்கட்கு வேண்டிய மாயை இரண்டு. அவை முறையே பகுதிமாயை தூவாமாயை எனப்படும் இம் மாயா வுடம்புகளால் ஆருயிர்கள் தம் உண்மை இயல்பு அறிய முடியாதபடி மறைக்கப்பட்டுள்ளன. உண்மைத் தன்மை - சொரூபம். காயம் ஐந்து வருமாறு: பருவுடம்பு, நுண் உடம்பு, வளியுடம்பு, மனவுடம்பு, அறிவுடம்பு, இன்பவுடம்பு என்றலும் ஒன்று இவ் ஐ வகை உடம்புகளின் உண்மைகளைச் சிவகுருவருளால் தேர்ந்து தெளிதலே கழிதலாகும். கழியவே தன் உண்மை புலனாகும். புலனாகத் தூய பரஞ்சுடர்ச் சிவபெருமான் தோன்றி யருள்வன். அச் சிவபெருமான் அருளும் தோற்றத்தின்கண் தம்மையும் அறிதல் கூடும். நாம் திருக்குறளைப் பயிலும்கால் திருவள்ளுவ நாயனாரை உணர்கின்றோம். அந் நாயனாரை உணருங்கால் உணர்கின்ற நம்மையும் நாம் உணருகின்றோம் அல்லவா? அதுபோன்றதாகும் ஆருயிர்கள் சிவனை யுணருங்கால் தம்மை யுணர்வதும் 'கண்ணாடி யைக்காண்பான் காணானோ தன்முகமும், உண்ணாடில் ஈதொப்பாம் ஓர்' அங்ஙனம் ஆய்பவர் ஞானம் நிறைந்த மோனத்தராவர். (அ. சி.) மாயை இரண்டு மூலப் பிரகிருதி மாயை, அசுத்தமாயை, காயம் ஓர் ஐந்தும் - அன்னமய கோசம் முதலிய ஐந்து கோசங்களும் அல்லது ஐந்து பூதங்களால் ஆகிய காயம். (7)
2. ஞானகுரு தரிசனம் (சிவகுருக் காட்சி) 2608. ஆறொடு முப்பதும் அங்கே யடங்கிடிற் கூறக் குருபரன் கும்பிடு தந்திடும் வேறே சிவபத மேலாய் அளித்திடும் பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே. (ப. இ.) அருஞ் சைவர் மேற்கொள்ளும் (2139) முப்பத்தாறு மெய்களும் சிவகுருவின் அருள்வழி நிற்றலால் அங்கே அடங்கிடும். அவன் செவியறிவுறுத்திய திருவைந்தெழுத்தின் வழிநிற்கச் சிவபெருமானின் திருவடி தலைப்பெய்தலாகிய கும்பிடுதல் கைகூடும். அது கைகூடவே சிறப்பாகிய பேரின்பப் பெருவாழ்வாம் சிவபதத்தினை மேலாக அளித்தருள்வன். அவன் திருவடியினை மறவா நினைவுடன் பேணிவரவே பேரின்பம் அளவின்றி உளமெலாம் பெருகி ஊறியோடும். (அ. சி.) கும்பிடு - ஐக்கியம். (1)
|