1071
 

2609. துரியங்கள் மூன்றுங் கடந்தொளிர் சோதி
அரிய பரசிவம் யாவையு மாகி
விரிவு குவிவற விட்ட நிலத்தே
பெரிய குருபதம் பேசவொண் ணாதே.

(ப. இ.) ஆருயிர்ச் செயலறல், அருள் செயலறல், அருளொன் செயலறல் ஆகிய துரியங்கள் மூன்றும் கடந்து அப்பால் திகழும் அறிவுப் பேரொளிப் பிழம்பு சிவபெருமான். அவனே மாற்றம் மனங்கழிய நிற்கும் அருமைசேர் பரசிவம் அவனே யாவையும் ஆகிப் பிரிவின்றி நிற்கும் பெரும் பொருள். நினைப்பும் மறப்புமாகிய விரிவும் குவிவும் என்று பேசப்படும் அவ் விரண்டும் அற அகன்றதாகிய தூய நிலம் விட்ட நிலம் எனப்படும். இதுவே 'வானோர்க்கு உயர்ந்த வுலகம்' அவ்விடமே திருவடிப்பெரும். பேறாகும். அந்நிலை பேச ஒண்ணாப் பெருநிலை என்க. சீவதுரியம், பரதுரியம், சிவதுரியம் எனத் துரியங்கள் மூன்று.

(அ. சி.) விரிவு குவிவு அற - நினைப்பு மறப்பு ஒழிய. குருபதம் - திருவடிப்பேறு.

(2)

2610. ஆயன நந்தி யடிக்கென் றலைபெற்றேன்
வாயன நந்தியை வாழ்த்தவென் வாய்பெற்றேன்
காயன நந்தியைக் காணவெண் கண்பெற்றேன்
சேயன நந்திக்கென் சிந்தைபெற் 1றேனன்றே.

(ப. இ.) ஆயாகிய தாயை யொத்த நந்தியின் திருவடியை வணங்கிச் சுமக்கத் திருவருளால் தலைபெற்றுள்ளேன். அத் தலை அடியேனுக்கு அத்தொண்டின் பொருட்டு அருளால் கொடுக்கப்படும் இரவற் கருவியாகும் கற்பார்க்குக் கொடுத்துதவும் இரவல் ஏடு இதற்கொப்பாகும். அவிச்சுவையினும் செவிச்சுவை ஆற்றச் சிறப்பினதாகும். அவிச்சுவையின்றேல் செவிச்சுவையினைக் கோடலும் ஏலா. எனவே சுவை யுணர்வு சேர் வாயை யொத்த நந்தியை வாழ்த்துதற் பொருட்டே வாய் பெற்றுள்ளேன். இயற்கைப் பேரறிவே யாண்டும் திருமேனியாகக் கொண்டு திகழும் நந்தியை அகத்தும் புறத்தும் காண நான் கண் பெற்றுள்ளேன். மாற்றம். மனம் கழிய நின்ற மறையோனை ஆற்ற உணர்வின்கண் காண்பதற்கு வாயிலாகிய எண்ணம் எனும் சிந்தை பெற்றுள்ளேன். மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனை மாற்றம் மனம் வழிய வுணர்தற்கு வாயில் சிந்தை என்றலும் ஒன்று. சேயன-எட்டாத் தன்மையை உடைய. அப்பர் பெருமானார் அருளிய 'திருவங்கமாலைத் திருப்பதிகம் முற்றும் ஈண்டு நோக்கி இன்புறுக. அதன்கண் ஒன்று முதல் ஒன்பதும் உறுப்பின் பணியாகும். பத்து : இறை, பதினொன்று : உயிர், பன்னிரண்டு : தளை, ஆகிய மூன்றும் முப்பொருளுண்மையாகும்.

(3)


1. வாழ்த்த. அப்பர், 5. 90 - 7.

" மானுடப். சிவஞானசித்தியார், 2. 4 - 20.

" உணர்வி. 12. சம்பந்தர், 161.

" கோளில். திருக்குறள், 9.

" சிந்தை. 8. திருச்சதகம், 79.

" சிந்தனைநின். 8. " 26.