1104
 

அத் திருவருளின்மேல் திருவடிச் செந்தேன் முந்திப் பொழியும். அங்குச் சிவபெருமான் இன்பத் திருக்கூத்தியற்றியருளுகின்றனன். சுட்டுணர்வு சிற்றுணர்வு அவற்றான் அறியப்படும் பொருள்நிலை எல்லாங் கடந்த நிலை திருவருள் நிலையாகும். அந் நிலையின்கண் சிவபெருமான் திருக்கூத்தியற்றியருளுகின்றனன். அங்ஙனம் இயற்றியருளும் சிவன் திருப்பேர் நம்பி. அத்தகைய நம்பிக்கு அத் திருவருள் நிலையே ஆனந்தக் கூத்தாடற்குரிய ஆடரங்காகும்.

(அ. சி.) தேன் உந்தும் - இன்பம் பிறக்கும். நம்பிக்கு - சிவபிரானுக்கு. ஆனந்தம் - ஆனந்த சத்தி.

(1)

2679. ஆனந்தம் ஆடரங் கானந்தம் பாடல்கள்
ஆனந்தம் பல்லியம் ஆனந்த வாச்சியம்
ஆனந்த மாக அகில சராசரம்
ஆனந்தம் ஆனந்தக் கூத்துகந் தானுக்கே.

(ப. இ.) சிவபெருமான் ஆருயிர்கள் எல்லாமும் பேரின்பம் எய்துதற் பொருட்டே திரு ஐந்தொழில் புரிந்தருள்கின்றனன். அதனால் எல்லாம் இன்பமயமேயாம். நோய்ப்பட்டார் நோய் நீங்கி நலமுற்ற காலத்து முன்நோய் நீங்குதற் பொருட்டு நிகழ்ந்த மருந்து மருத்துணா முதலிய அனைத்தும் இன்பத்திற்கு வாயில் என்னும் உண்மையினை உணர்வர். உணர்ந்ததும் அதனையும் இன்பமாகவே கருதுவர். இது போன்றதாகும் இறைவன் திருவருட் செயலும். அச் சிவன் ஆடும் அரங்கமும் இன்ப நிலையமாகும். ஆண்டு நிகழும் திருமுறைப் பாடல்களும் இன்பமேயாம். குடமுழா முதலிய பலவகை வாழ்த்தியங்களும் இன்பமேயாம். குழல் யாழ் போன்ற வாழ்த்தியங்களும் இன்பமேயாம். அனைத்து உலகத்திலுமுள்ள இயங்கு திணை நிலைத்திணைப் பொருள்கள் எல்லாமும் இன்புறுதற் பொருட்டே சிவபெருமான் திருக்கூத்தியற்றியருள்கின்றனன். அதனால் அவைகளும் நீங்கா இன்பம் உறுகின்றன. இன்பக் கூத்தினை இடையறாது உஞற்றி அதனால் கூத்துக்காணும் சிவபெருமானுக்கும் உகப்பே - உயர்நிலையே உண்டாகின்றது ஆயின் திருக்கூத்து எல்லார்க்கும் எவைக்கும் பேரின்பமேயாம்.

(அ. சி.) பல்லியம் - பல இசை; கொட்டுக் கருவிகள். வாச்சியம் அபிநயம். அகில....னுக்கே - கூத்தப்பிரானுக்கு ஐந்தொழில் கூத்து. ஆனந்தமே என்னெனின், கேவல நிலையிலுள்ள ஆன்மாக்கள் முத்தி யெய்துவார்கள் என்று எண்ணியே.

(2)

2680. ஒளியாம் பரமும் உளதாம் பரமும்
அளியார் சிவகாமி யாகுஞ் சமயக்
களியார் பரமுங் கருத்துறை யந்தத்
தெளிவாஞ் சிவானந்த நட்டத்தின் சித்தியே.

(ப. இ.) அறிவுப் பேரொளியாய் விளங்கும் முழுமுதலும், என்றும் மாறா உண்மையாகத் திகழும். முழுமுதலும், பேரருள் நிறைந்த சிவகாமியே யாகும். 'சிவகாமி' என்பது சிவனார் விழையும் விருப்பமே தன் விருப்பமாகக் கொண்டொழுகும் 'காமி' என்பதாம். நன்னெறிக்கண் நிற்பார்க்கு அளவிடப்படாத பேரின்பப் பெருவாழ்வை அருளிச் செய்யும் முழுமுதலும்,