நெறியெனக் குறிக்கும் குறிப்பாகும். அந்நன்னெறியின் முழுமுதல்வன் சங்கரன் ஆவன். அவன் நடுநாடியினுள் அறிவினில் தங்கித் தொம்திம் எனத் தாளமிசைத்துத் திருக்கூத்தாடுவன். அக்காலம் திருவருள் பொங்குங் காலமாகும். அத் திருவருள் நம்மாட்டுப் புகும். ஆனால் புறம்போகும் போக்கு இல்லை என்க. (அ. சி.) அங்குசம் என்ன எழுமார்க்கம் - பிற சமயங்களை அடக்குவதில் அங்குசம் போன்றுள்ள சன்மார்க்கமாகிய சைவம். போதத்தில் - ஞானத்தில் தொந்தி - தொம்தீம் எனத் தட்டும் தாளம். மூலநாடி - சுழுமுனை நாடி பொங்கிய காலம் நெடுங்காலம் போகல் - அழிதல். (4) 2690. ஆனத்தி யாடிப் பின்னவக் கூத்தாடிக் கானத்தி யாடிக் கருத்தில் தரித்தாடி மூனச் சுழுனையுள் ஆடி முடிவில்லா ஞானத்துள் ஆடி முடித்தான்என் 1நாதனே. (ப. இ.) ஆருயிர்களை உய்வித்தற்பொருட்டு அவ்வுயிர்கள்மாட்டு அளவிறந்த அன்பு பூண்டு படைத்தல் முதலிய ஐந்தொழிற் றிருக்கூத் தாடுகின்றனன் சிவன். ஆடியபின்பு அருவம் நாலு, உருவம் நாலு, அருவுருவம் ஒன்று ஆக ஒன்பது திருவுருவங்களிடமாக நின்று ஒன்பது வகையான திருக்கூத்தாடுகின்றனன். பேரொடுக்கப் பெருங்காட்டை விழைந்து பேரூழிப் பெருங்கூத்தாடுகின்றனன். ஆருயிர்களின் கருத்தினிலும் தங்கியாடுகின்றனன். மூன்று நாடிகளும் ஒருங்குகூடும் நடுவிடமாகிய சுழுனையுள்ளும் திருக் கூத்தாடுகின்றனன். எவற்றிற்கும் மேலாய் முடிவு பேறில்லாத மெய் யுணர்வின்கண் படிப்படியாக வந்து திருக்கூத்தாடி நிறைந்துநின்றனன். அவனே அடியேனுடைய ஆருயிர் நாதனாவன். (அ. சி.) இம் மந்திரம் ஆனத்தி, அதாவது ஐந்தொழில் நடன முதல் ஞானக்கூத்து ஈறாக ஆடும் ஆட்டங்களைக் குறித்தது. நவக்கூத்து சிவத்தின் ஒன்பது பேதமான கூத்து. (அருவம் 4, உருவம் 4, அருவுருவம் 1 ஆக 9.) (5) 2691. சத்திகள் ஐந்துஞ் சிவபேதந் தானைந்தும் முத்திகள் எட்டும் முதலாம் பதமெட்டுஞ் சித்திகள் எட்டுஞ் சிவபதந் தானெட்டுஞ் சுத்திகள் எட்டீசன் தொல்நட மாடுமே. (ப. இ.) திருவருளாற்றலின் வகை ஐந்தாகும். அவை முறையே வனப்பாற்றல் நடப்பாற்றல் எனவும், நடப்பாற்றலின் வகையாகிய அறிவாற்றல், தொழிலாற்றல், அன்பாற்றல் எனவும் வழங்கப்படும். இத் திருவருளாற்றல் ஐந்தும் முறையே பராசத்தி, ஆதிசத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி, இச்சாசத்தி எனப்படும். இவ்வாற்றல் நிலைக்கு ஏற்றவாறு சிவபெருமானும் ஐவகையாக நின்றருள்வன். முத்தியாகிய வீடுபேறு எட்டென்ப. அவை முறையே சீலம், நோன்பு, செறிவு, அறிவு
1. சிவஞ்சத்தி. சிவஞானசித்தியார், 2. 4 - 2. " எட்டி. 11. காரைக்காலம்மையார், மூத்த திருப்பதிகம், 1.
|