நிறைந்து நிற்றல் வேண்டும். அது மாதவம்செய் தென்திசை சேர்ந்தார்க்கே கைகூடுவதொன்றாம். இன்பமே வடிவாய் ஆருயிர்கட்குப் போகத்தைப் புரிதற் பொருட்டுப் பூவைப் பூப்போலும் திருமேனியையுடைய திருவருளம்மையும் தானுமாகப் புணர்ந்து நின்று சார்பு பற்றாத ஏரின்பமாய்த் திருக் கூத்தியற்றி யருளுகின்றனன். நிரானந்தம் - என்றும் பொன்றா ஏரின்பம். நின்று பொன்றின்பம் - சாரின்பம். பூவைப்பூ - காயாம்பூ. (அ. சி.) குரு ஆனந்த ரேகை - குருவால் அருளப்பட்ட ஆனந்த மார்க்கம். சிரம் ஆனந்தம் - மேலான ஆனந்தம். புரானந்தம் - புரி ஆனந்தம் - சரீர ஆனந்தம். பூவை - உமாதேவி. நிரானந்தம் - நித்தியானந்தம். (2) 2705. ஆதி பரன்ஆட அங்கைக் கனலாட ஓதுஞ் சடையாட உன்மத்த முற்றாடப் பாதி மதியாடப் பாரண்ட மீதாட நாதமோ டாடினான் நாதாந்த நட்டமே. (ப. இ.) ஆதிபரனாகிய சிவபெருமான் ஆடுதலாகிய திருவுள்ளக் குறிப்பு நேர்பட அவன் திரு அங்கையின்கண் விளங்கும் கனலாடிற்று. அனைத்திற்கும் அருட்புகலிடமாக நிலவும் திருச்சடையும் ஆடிற்று. அச்சடை எல்லாராலும் போற்றிப் புகழப்படுவதொன்று அத் திருச்சடையின்கண் காணப்படும் உன்மத்தம் ஆகிய ஊமத்த மலரும் ஆடிற்று. திருச்சடையிற்றிகழும் ஆருயிராகிய பாதிமதியும் ஆடிற்று. நில அண்டங்களும் ஆடின. அருஞ்சைவர் கொள்ளும் (2139) முப்பத்தாறாம் மெய்யாகிய நாதத்தின்கண் திருவருளாற்றலுடன் சிறந்தாடினன். இதனையே நாதாந்த நட்டம் என்ப. நட்டம் - நடனம். ஆட்டம் - புடை பெயர்ச்சி; அசைவு. உன்மத்தம் - மிக்க களிப்பு என்றலும் ஒன்று. (அ. சி.) பார் அண்டம் - பூமி அண்டம். நாதமோடு - நாத சத்தியோடு. (3) 2706. கும்பிட அம்பலத் தாடிய கோனடம் அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாஞ் செம்பொரு ளாகுஞ் சிவலோகஞ் சேர்ந்துற்றால் உம்பர மோனஞா னாந்தத்தில் 1உண்மையே. (ப. இ.) அனைத்துயிர்களும் அன்புடன் வழிபட்டு இன்புற்றுய்ய முழுமுதற் சிவபெருமான் ஆடிய திருநடம் திருச்சிற்றம்பலத்தின்கண்ணாகும். அத் திருக்கூத்து அழகிய சிவபெருமான் புரிந்தருளும் அகிலாண்டத் திருக்கூத்தாகும். சிறப்பென்னும் செம்பொருள் விளங்கும் திருச்சிற்றம்பலம் சிவ வுலகமாகும். அதனைச் சார்ந்தவர் சிவ வுலகத்தவரே யாவர். ஈண்டுப்புரியும் திருக்கூத்தே மேலான ஞானவரம்பின் முடிந்த ஞானத்தின் உண்மைத் திருக்கூத்தாகும். ஞானத்தின் ஞானம் என்பது நன்னெறி நான்மையின் பதினாறாம் பேறாகிய முடிந்த உண்மைப் பேறாகும் அதுவே அறிவில் அறிவாகும். திருத்தில்லையே திருவடிப்
1. நம்பனே. அப்பர், 6. 44 - 5.
|