1123
 

அவ்வோசைகள் திகழும் தூமாயையினையே தன் நேர்நிலையாகக் கொண்டு எழுந்தருளிவந்து அருள்கின்றனன். ஐவகை ஓசை: நுண்ணோசை, நினைவோசை, மிடற்றோசை, செவியோசை கேட்பிக்கும் ஓசை. நூலுணர்வு - அபரஞானம். நுண்ணுணர்வு - பரஞானம்.

(அ. சி.) ஐந்து நாதம் - ஐவகை வாக்குகளாயுள்ள நாதங்கள்.

(11)

2714. ஆடிய காலும் அதிற்சிலம் போசையும்
பாடிய பாட்டும் பலவான நட்டமுங்
கூடிய கோலங் குருபரன் கொண்டாடத்
1தேடியு ளேகண்டு தீர்ந்தற்ற வாறன்றே.

(ப. இ.) திருக்கூத்துப் புரியும் திருவடியும், அத் திருவடிக்கண் கிடந்து ஒலிக்கும் மறைச்சிலம்பொலியும், அச் சிலம்பொலியின் விரிவாகக் காணப்படும் திருமுறைத் திருப்பாட்டுக்களும், அத் திருப்பாட்டுக்களின் மறைப்பொருளாய் விளங்கும் பலவகையான திருநடனங்களும் சிவபெருமான் திருவருளால் புரிந்தருளுகின்றனன். அதன்பொருட்டுக்கொண்டருளிய திருக்கோலமும் பலவாம். அவ்வகை அருட்டிருக் கோலங்களைக் கொண்டு வருபவன் குருபரன். அவ்வாறு வருவதும் மெய்யுணர்வினர் கொண்டாடுதற்பொருட்டும் உய்தற்பொருட்டுமாம். அவனைத் திருவருளால் அடியேன் உணர்வின் உள்ளே தேடிக் கண்டுகொண்டேன். காண்டலும் அற்றது பிறப்பு. உற்றது சிறப்பு. சிறப்பெனினும் திருவடிப் பேறெனினும் ஒன்றே.

(அ. சி.) அற்றவாறு - பிறப்பு அற்றவாறு.

(12)

2715. இருதயந் தன்னில் எழுந்த பிராணன்
கரசர ணாதி கலக்கும் படியே
அரதன மன்றினின் மாணிக்கக் கூத்தன்
குரவனாய் எங்கணுங் கூத்துகந் தானே.

(ப. இ.) மாணிக்கக் கூத்தன் என்று சொல்லப்படும் ஒப்பில் ஒரு பெரும் முதன்மைக் கூத்தன் சிவபெருமான். அவன் திருவாலங் காட்டின்கண் மணிமன்றம் அணிபெறத் தணியாப் பெருங்கூத்தியற்றுகின்றனன். அவனே அனைவர்க்கும் மெய்க்குரவனாவன். மணிமன்றம் ஐவகை மன்றினும் முதன்மை வாய்ந்தது. ஏனைநான்கு மன்றங்களும் பொன், வெள்ளி, செம்பு, ஓவியம் எனப்படும். இவ்வைந்தும் ஒருபுடை யொப்பாகச் 'சிவயநம' என்னும் திருவைந்தெழுத்தினைக் குறிப்பதாகும். இவ்வுண்மையினை வரும் வெண்பாவால் நினைவுகூர்க:

"மேலாம் 'சிவயநம' மேவுமணி பொன்வெள்ளி
பாலாம்செம் போடுமண் பற்றல்போல் - மேலாம்
அவனாடல் செய்வனகம் ஆல்தில்லை கூடல்
தவநெல்லை குற்றாலந் தான்."

மண் - ஓவியம். ஆல் - திருவாலங்காடு. கூடல் - மதுரை.


1. தேடிக் அப்பர், திருவங்கமாலை, 12.

" திருச்சிலம். திருவுந்தியார், 17.