1128
 

(ப. இ.) செம்பொன் அம்பலம் - தில்லைத் திருச்சிற்றம்பலம் முதலிய மன்று நிறைந்த திருவிளக்கொளிபோன்று கதிர் காலும் பெருமலர். இது நன்மைதரும் மென்மை மலராகும். இதன் இதழ்கள் நூற்று நான்கெனவும், இருநூற்றுப்பத்தெனவும் கூறப்படும். இம் மலர்கள் ஆறாதாரத்துக் காணப்படும் என்ப. இவையனைத்தும் சிவபெருமான் நின்றருளும் நெடுமண்டலமாகும்.

(அ. சி.) நாலொடுநூறு - 104. பத்திருநூறு - இருநூற்றுப் பத்து.

(11)

2727. அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி
தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி
எண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடி
அண்டன் நடஞ்செயும் ஆலயந் தானன்றே.

(ப. இ.) அளவில்லாத எழுகோடி அண்டங்களும், அவைபோன்று எழுகோடிப் பிண்டங்களும், தெளிந்த திரையையுடைய கடலாற் சூழப்பட்ட திசைகளும் விளங்கும் எழுகோடித் தீவுகளும், எட்டுத் திசைகளிலும் காணப்படும் அளவில்லாத சிவக்கொழுந்து எனப்படும் சிவலிங்கங்களும் எழுகோடி என்ப. இவ்விடங்களனைத்தும் அண்டனாகிய சிவபெருமான் நடனஞ்செய்யும் திருக்கோவில்களாகும்.

(12)

2728. ஆகாச மாமுட லங்கார் முயலகன்
ஏகாச மாந்திசை யெட்டுந் திருக்கைகள்
மோகாய முக்கண்கள் மூன்றொளி 1தானாக
மாகாய மன்றுள் நடஞ்செய்கின் றானன்றே.

(ப. இ.) வெளியாம் உடலும், காற்கீழ் கரிய நிறமுடைய முயலகனும், மேலாடை போன்று காணப்படும் எட்டுத் திசைகளும் கைகளாகவும் கொண்டு, மிக்க வேட்கையினையுடைய மூன்று கண்களும் மூன்றொளிப் பொருள்களாகவுள்ள ஞாயிறு திங்கள் தீயாகவும் கொண்டு திகழ்வோன் சிவன். அவன் அறிவுப் பேரொளியாகிய பெருவெளியில் அறிவுப் பெருநடஞ்செய்தருளுகின்றனன். 'முயலகன்' என்பது நன்னெறி நான்மையின்கண் முயல்வுறும் நல்லாரை முயலவொட்டாது தடுக்கும் ஆணவம். அதன் சார்பாம் மருள், பிறப்புறுவார்கட்குச் சிறந்த கரும்பு போன்று இனிக்கும். அதனை அரைத்து அடிக்கீழ் அமுக்குவது ஆண்டவன் அருட்செயலாகும். அவ்வுண்மை வரும் பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாட்டானுணர்க:

"பெறுவது பெற்ற உறுதியுத் தமர்கட்கு
ஆயினும் சிறந்த நேயநெஞ் சினனே
யாகக் கழனியின் யோகத் தபோதனர்
ஆன பேருழவர் மானமோ டாக்கிய

5. முய லகனென்னு மியல்பெருங் கரும்பை.


1. நாயகன். சிவஞானசித்தியார், 1. 2 - 24.

" நலமலி. அப்பர், 4. 14 - 8.