17. மறைபொருட்கூற்று 2826. காயம் பலகை கவறைந்து கண்மூன்றாய் ஆயம் பொருவதோர் ஐம்பத்தோ ரக்கரம் ஏய பெருமா னிருந்து பொருகின்ற மாயக் கவற்றின் மறைப்பறி 1யேனன்றே. (ப. இ.) உடம்புடன் கூடிய ஆருயிர்களின் வாழ்க்கை ஒரு கவறாட்டம் போன்றது. கவறு - சூது. உடம்பு பலகையாகவும், ஐம்புலன்களும் கவறாடு கருவியாகவும், வலம் இடம் புருவநடு என்னும் மூன்றும் இடமாகவும், ஐம்பத்தோ ரெழுத்தும் சூதாடும் காய்கள் நிரப்பும் அறையாகவும் கொண்டு என்றும் ஆருயிருடன் பிரிப்பின்றி நின்று பொருந்தி அருள் செய்யும் சிவபெருமான் ஆருயிர்களைக் கையாளாக வைத்து கவறாடாநிற்கின்றான். இத்தகைய மாயக் கவற்றின்வழிச் செய்யும் அவன்றன் மறைப்பாற்றலின் பண்பை அறியேன் என்க. கண் மூன்றாய் என்பதற்கு நெஞ்சம் கண்டம் புருவமத்தி என்றலும் ஒன்று. (அ. சி.) காயம் பலகை - உடம்பானது சூதாடு பலகை போன்றது. கவறு ஐந்து - ஐம்பொறிகளும் சூதாடு கருவிபோன்றது. கண்மூன்றா - வலம், இடம், புருவமத்தி ஆகிய மூன்றும் மூன்றிடங்களாக. ஆயம் - சூதாடு கருவியிலுள்ள அறை. மாயம் - வஞ்சகம். (1) 2827. தூறு படர்ந்து கிடந்தது தூநெறி மாறிக் கிடக்கும் வகையறி வாரில்லை மாறிக் கிடக்கும் வகையறி வாளர்க்கு ஊறிக் கிடந்ததென் உள்ளன்பு தானன்றே. (ப. இ.) காமம் வெகுளி மயக்கமென்று சொல்லப்படும் தடைகளாகிய சின்னஞ்சிறு செடிகள் முளைத்து உடம்பகத்துக் காணப்படுகின்றன. அருளால் அவற்றினின்றும் நீங்கித் தூய சிவ நன்னெறிக்கண் நிற்கும் வகையறிவாரில்லை. அங்ஙனம் நீங்கி நிற்கும் வகையறிந்து ஒழுகும் வாய்மையாளர்க்குச் சிவன் வெளிப்பட்டருள்வன். அவர்பால் என் உள்ளம் அன்பூறி ஆர்வம் பெருகிக்கிடந்தது என்க. (அ. சி.) தூறு - சிறுசெடி (காமாதி). தூநெறி மாறி - நீங்கித் தூய்மையான நெறியில். ஊறி - சுரந்து. (2) 2828. ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியிற் சாறு படுவன நான்கு பனையுள ஏறற் கரியதோர் ஏணியிட் டப்பனை ஏறலுற் றேன்கடல் ஏழுங்கண் டேனன்றே.
1. எண்ணரு. காஞ்சிப். அனந்த, 2. " சூதினில். 12. மூர்க்கநாயனார், 10. " நிலமிசை. புறநானூறு, 43. " கவறும். திருக்குறள், 935.
|