கிடக்கும் கொம்மட்டிப் பழமாகும். அதுவே 'குட்டத்திலிட்டதோர் கொம்மட்டி யாமே' என்றருளினா. (அ. சி.) தட்டத்துநீர் - வலதுமூக்கு, பிங்கலை, தாமரை - இரேசக வாயு. குட்டத்து நீர் - இடதுமூக்கு, இடைகலை. குவளை - பூரகவாயு. விட்டம் - சுழுமுனை. விளங்க - கும்பகம் செய்ய. (38) 2864. ஆறு பறவைகள் ஐந்தகத் துள்ளன நூறு பறவை நுனிக்கொம்பின் மேலன ஏறும் பெரும்பதி ஏழுங் கடந்தபின் மாறுத லின்றி மனைபுக 1லாகுமே. (ப. இ.) ஐந்தகம் என்று சொல்லப்படுகின்ற ஐம்பூதக் கூட்டரவாலாகிய இவ் வுடலகத்துச் செருக்கு, சினம், சிறுமை, இவறல், மாண் பிறந்தமானம், மாணாவுவகை என்று சொல்லப்படும். அறுபகையாகிய பறவைகள் ஆறும் உள்ளன. நுனிக்கொம்பாகிய எழுச்சியின்கண் எண்ணிலா எண்ணங்களாகிய நூறு பறவைகள் உள்ளன. ஏறும் பெரும்பதியாகிய புலம்பு, புணர்வு, நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படங்கல் என்று சொல்லப்படும் ஏழினையும் கடந்தபின் எவ்வகை மாறதல்களுமில்லாமல் திருவடிப் பேற்றின்பமாகிய மனை புகுதலாகும். நூறு : அளவின்மைக்கோர் காட்டு. இயற்கைப் புலம்பினைச் செயற்கைப் புணர்வு முதலியவற்றுடன் ஒருங்கு வைத்துச் செயற்கைபோன்று உருவகித்து ஓதினார்; இஃது ஏனைய வேற்றுமைகட்டு இடனாகிய எழுவாயினையும் எழுவாய் வேற்றுமை எனக் கூறுவது போன்றாகும். (அ. சி.) ஆறு பறவைகள் - காமாதி ஆறு. ஐந்தகத்து ஐம்பூதங்களால் ஆகிய உடலகத்து. (39) 2865. கொட்டனஞ் செய்து குளிக்கின்ற கூவலுள் வட்டனப் பூமி மருவிவந் தூறிடுங் கட்டனஞ் செய்து கயிற்றால் தொழுமியுள் ஒட்டனஞ் செய்தொளி யாவர்க்கு மாகுமே. (ப. இ.) ஆருயிர்களின் நோக்கமாகிய விருத்திகளையும், முனைப்பையும் அடக்குவதே கொட்டனம் செய்தல் எனப்படும். அங்ஙனம் அருளால் அடக்கித் திருவடிப் பேரின்பமாகிய பெரு வெள்ளத்தில் மூழ்குதல் வேண்டும். அக் குறிப்பே குளிக்கின்ற கூவலுள் என ஓதப்பெற்றது. வட்டனப் பூமியாகிய நீங்காப் பேரின்ப நிலை ஓங்கிப் பெருகும். வட்டனப் பூமி: வட்டு + அல் + ந + பூமி எனப் பிரிந்து சூதாடு காய்போன்று மாறுதல் எய்தாத சிறந்த பூமியாகிய பேரின்ப நிலை எனப் பொருள்படும். அப் பேரின்ப நிலையைத் தங்கச் செய்வதாகிய கட்டுப்பாட்டினைப் பத்தி யென்னும் பருங்கயிற்றால் கட்டுதல் வேண்டும். உள்ளத்தினுள்ளே சிவபெருமானின் பெரும் பேரொளி யாவர்க்கும் ஒட்டுதலைப் பொருந்தி விளக்கமுறும் என்க. கட்டணம் என்பதற்குக் கட்டுச்சோறு என்றலும் ஒன்று. உள் ஒட்டனம் என்பதற்கு உணர்வினுள் ஒட்டியுறும் சோறாகிய பேரின்பம் என்றலும் ஒன்று.
1. நுனிக்கொம்பர். திருக்குறள், 676.
|