வாறு ஒழிந்தேன். உறவென்று சொல்லப்படும் பாசம் அறவே கழிந்தது. கடவுளும் நானும் ஒன்றானோம். ஒன்றாதல் என்பது தெளிந்த பளிங்கிற் பதித்த மணிபோன்றும், மலரின் மருவும் மணம் போன்றும் அகல்வும் அமைவுமாய் ஒன்றாதல். மணி - செம்மணி; மாணிக்கம். அகல்வு - வியாபகம். அமைவு - வியாப்பியம். பிறந்திறந்துழலும் இளிவு வரும்வழி வேண்டேன். அழிந்தாங்கு என்பது இறந்தது போன்று மீண்டும் பிறந்திறந்துழலுதல். மேலும் நாரும் நறுமணப் பூவும் கண்ணியாய்ச் சூடிமகிழ்கின்றோம். கண்ணியாக்கும்போது வேறாக இருந்த இரு பொருளும் புணர்ந்து ஒன்றாகின்றது. அம் முறையே புனிதப் புணர்ப்பிற்கு நனிமிகப் பொருந்திய துனியில் ஒப்பாகும். மாலை கட்டும்போது முதலில் நாரைக் கையில் வைத்து நார் தோன்ற அதனுடன் பூவைத்துக் கட்டுகின்றோம். இது கட்டு நிலை. நார் உயிராகும்; பூ உயிருக்கு உயிராகும். பூ ஒட்ட ஒட்ட நார் மறைந்து பூத்தோன்றுகின்றது. அப்பொழுது அது பூமாலை எனப் பெயர் பெறுகின்றது. நார் உள்ளடங்கிவிடுகின்றது. இஃது ஒட்டுநிலை. இதுவே ஒன்றாம் உண்மைக்கு ஒன்றாம் ஒப்பு. 'கட்டுங்கால் நார்முன்னாம் கண்ணியாங் காற்பூமுன், ஒட்டிலிறை முன்னுயிர்பின் ஓது' என்பதனை நினைவு கூர்க. மேலும், "ஆணவத்தோ டத்துவிதம் ஆணபடி மெய்ஞ்ஞானத் தாணுவினோ டத்துவிதம் சாரும்நாள் எந்நாளோ." (28) என்பதுங் காண்க. (2) 2919. ஆலைக் கரும்பும் அழுதும்அக் காரமுஞ் சோலைத்தண் ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப் பீலிக்கண் ணன்ன வடிவுசெய் வாளொரு கோலப்பெண் ணாட்குக் குறைவொன்று 1மில்லையே. (ப. இ.) திருவருள் நினைவால் திருவடியுணர்வால் அத் திருவடிக்கண் அழுந்தியறிதலாகிய தன்னுகர்வு நாட்டில், ஆலையிலிட்டு எடுத்த கரும்பின்சாறும், அமுதாகிய நல்லாவின் தூய பாலும், வெல்லக் கட்டியும், வானாளவும் வண்தருக்கள் நிறைந்துள்ள சோலை நாப்பண் வற்றா ஊற்றாய் முற்றப்பருக உற்று நிற்கும் இனிய தண்ணீரும் உண்டு. மயிற்பீலி போலும் நனிமிகு வியத்தகு வடிவுகளை அவ்வப்பொழுது படைத்தளித்தருளும் செல்வி அருட்பெருந் திருவாகும். அவளே கோலப் பெண்ணாவாள். அவளே வனப்பாற்றலினளாவள். அத்தகைய உலக அன்னையைச் சார்ந்த மெய்யடியார்கட்குக் குறை வொன்றும் இல்லை என்க. ஆருயிர்களைக் கோலஞ் செய்யும் அன்னை கோலப் பெண்ணாள் என்று கூறப்பட்டாள். கோலஞ் செய்தல் - வனப்புறுத்தல்; அழகு படுத்தல்; ஒப்பனை செய்தல். சீலத்தார் பெறுபயன் ஆலைக் கரும்பு. நோன்பினர் பெருபயன் அமுது. செறிவினர் பெறுபயன் செறிந்தகட்டி. அறிவினர் பெறுபயன், சோலைத் தண்ணீர். சோலைத்தண்ணீர்; உம்மைத் தொகையாய்ச் சோலையும் தண்ணீரும் எனப் பொருள் தந்து சோலை திருவடி நீழலையும், தண்ணீர் திருவடிப் பேரின்பத்தையும் குறிப்பனவாகும். (3)
1. கனியினும். அப்பர், 5. 14 - 10. " ஆனையாய்க். 8. திருவம்மானை, 14. " ஆணமில். நாலடியார், 374.
|