2920. ஆராலும் என்னை அமட்டவொண் ணாதினிச் சீரார் பிரான்வந்தென் சிந்தை புகுந்தனன் சீராடி யங்கே திரிவதல் லால்இனி யார்பாடுஞ் சாரா அறிவறிந் 1தேனன்றே. (ப. இ.) பொறிபுலன் கரணம் ஆகிய இவை பெறும் உயிர்க் கிழவர் யாராலும் என்னை இனிமேலும் கட்டுறுத்த ஒண்ணாது. காரணம், சீரார் பிரானாகிய சிவபெருமானும் எளியேன் நாட்டத்தினுள் புகுந்து நிறைந்து நின்றருளினன்; அதனான் என்க. சிவனடியார் என்னும் சிறப்புநிலை உறப்பெற்று நீங்கா வாழ்வுற்று ஆங்குந் தூங்குகின்றேன். இனி என்ன நேரினும் சிவனை நினையாச் சிறப்பிலார் எவர் பாலும் சேர்வதில்லை. அங்ஙனம் சாராதிருக்கும் அறிவினைத் திருவருளால் ஒருவா வண்ணம் பெற்றனன். அதனால் இனி யார் பாடும் அணுகேன் என்றோதினர். அமட்டுதல் - கட்டுறுத்தல். சிந்தை - நட்டம். (4) 2921. பிரிந்தேன் பிரமன் பிணித்ததோர் பாசந் தெரிந்தேன் சிவகதி செல்லு நிலையை அரிந்தேன் வினையை அயில்மன 2வாளால் முரிந்தேன் புரத்தினை முந்துகின் றேனே. (ப. இ.) பண்டே புல்லிய மலநோய் நீங்குதற் பொருட்டுப் படைப் போனால் கூட்டிப் பிணிக்கப்பட்ட வினைமாயைகளைப் பாசம் என அருளால் தெரிந்தேன். அதனால் மும்மலப் பிணிப்பினின்றும் பிரிந்தேன். என்றும் பொன்றாச் சிவநிலையினை (2913) அவ் வருளாலே தெரிந்தேன். அந் நிலையினை எய்தும் நெறியினையு முணர்ந்தேன். திருவைந்தெழுத்தை இடையறாது மருவும் = மனம் ஞான அயில்வாளாகத் திகழும். அதனால் வினைப் பிணிப்பினை அறுத்தேன். வினைப் பிணிப்பறலால் முப்புரமனைய இவ் வுடல் இடை முரிந்து இற்றொழியுமாறு செய்தேன். திருவடிப் பேற்றினை எய்துமாறு முந்துகின்றேன். (அ. சி.) முரிந்தேன் - கெடுத்தேன். புரத்தினை - உடம்பினை. (5) 2922. ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும் ஒன்றுகண் டீர்உல குக்குயி ராவதும் நன்றுகண் டீர்இனி நமச்சிவா யப்பழந் தின்றுகண் டேற்கிது தித்தித்த 3வாறன்றே.
1. மூள்வாய. அப்பர், 6. 27 - 9. " நண் அனல். சிவஞானபோதம், 10. 2 - 4. " கோணிலா. 8. அச்சப்பதிகம், 10. " வாராண்ட, மூவுருவின. அப்பர், 6. 98 - 3, 6. 2. படைக்கல. அப்பர், 4. 81 - 8. " ஆற்றுவார். திருக்குறள், 985. 3. சமயமே, பையஞ்சுடர்விடு. அப்பர், 4. 45 - 5. 4 - 10. " உய்த்தவன், ஆலைப்." 6. 48 - 4. 52 - 2.
|