124
 

பண்பின் பயன் மங்கிக்கெடும்படி கலாம் விளைப்பர். திருவைந்தெழுத்தாகிய செம்பொருட் செங்கோலைக் கைப்பற்றினால் ஐம்புலப் பறவைகள் தம்புலமற்று முனைத்துக் கூடா. எனவே அவை அடங்கும். அடங்கவே அவர் 'தம்மை ஐந்து புலனும் பின்செல்லும் தகையோ'ராவர். இந் நன்னெறிக்கு உய்க்கும் நிலையுடைக் கல்வியினை அறியாதார் உடல் உலக ஊண்களில் மயக்குற்றுப் பிறப்பு இறப்பாகிய தடுமாற்றத்தால் மயங்கித் துன்புறுகின்றார்கள்.

நூல் - வீட்டுநூல், அல்லது உச்சித்துளை. நுனி - உச்சியிடம் அல்லது வீடு. பண்பு - தலைக்குணம். கோல் - கழி; நடுநாடியாகிய பிரமதண்டம். பறவை - புலன்கள். மால் - மயக்க நூல்; பெரும்பற்று.

(அ. சி.) நூல் - தத்துவ ஏணி. பால் - சார்பு. கோல் - அஞ்செழுத்து. பறவைகள் - எண்ணங்கள்.

(6)

283. ஆய்ந்துகொள் வார்க்கரன் அங்கே வெளிப்படும்
தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு
வாய்ந்த மனமல்கு நூலேணி யாமே.

(ப. இ.) திருவருளால் திருவடியுணர்வு கொண்டு அகத்தே ஆராய்வார்க்கு அரனாகிய சிவபெருமான் அங்கு அப்பொழுதே வெளிப்பட்டருள்வன். அது கதிர்க்கல்லானது கதிரோன் முன்னிலையில் அக்கதிரை வெளியில் வரச் செய்யும் தன்மையினை யொக்கும். பொருந்திய கட்டிளந் திங்கள் புருவநடுவிற் காணப்படும் மதிமண்டலமாகும். அம்மண்டலத்தை அங்கண் நின்று கூடற்குரிய பயிற்சி வல்லார்க்கு அமைந்த மனம் மேலோங்கிப் போவதற்குரிய படி ஏணி ஆகும். கதிர்க்கல் - சூரிய காந்தக்கல்.

(7)

284. வழித்துணை யாய்மருந் தாயிருந்1 தார்முன்
கழித்துணை யாங்கற் றிலாதவர் சிந்தை
ஒழித்துணை யாய்உம்ப ராய்உல கேழும்
வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே.

(ப. இ.) திருவடிக் கல்வி கற்றுணர்ந்தவர் செல்வன் கழலேத்துஞ் செல்வாய செல்வம் பெற்ற சிவனடியார் ஆவர். திருவருளால் யாவர்கட்கும் நன்னெறிக்கு உய்க்கும் வழித்துணையாவர். மேலும் மம்மர் அறுக்கும் மருந்துமாவர். அத்தகைத் திருவுடையார் முன்பு மேலோதிய கல்வியைக் கற்றிலாதவர் கழித்தொதுக்கும் பழித்துணையாவர். சிவபெருமான் மன மடங்கச் செய்தருளுவன்; ஆருயிரைத் தனதிடங் கருதுமாறு கருதும் துணையாவன். விண்ணவர் முதலாகச் சொல்லப்படுகின்ற ஏழுலகத்தார்க்கும் மும்மை நலமெய்தச் செம்மை வழித்துணையாயிருப்பவனும் சிவனே. இத்தகைய பெருந்தன்மை வாய்ந்த எல்லாம் வல்ல இயல்பினனும் சிவனே. கழித்துணை - நீக்கிவிடத்தக்க நிலையினர். சிந்தை யொழித்துணை - மனம் அடங்குதற்கு உரிய துணை. மும்மை இம்மை, உம்மை, அம்மை இவற்றை 'இம்மை எனல் இப் பிறப்பாம் உம்மை வருபிறப்பாம், அம்மை பிறவாச் சிறப்பாம் அங்கு' என விரித்துக் காண்க.

(8)


1. வானநாடனே. ஆரூரர், 7. 70 - 9.