1249
 

2962. ஆதிப் பிரான்நம் பிரானவ் வகலிடச்
சோதிப் பிரான்சுடர் மூன்றொளி யாய்நிற்கும்
ஆதிப் பிரான்அண்டத் தப்புறங் கீழவன்
ஆதிப் பிரான்நடு வாகிநின் றானன்றே.

(ப. இ.) அனைத்திற்கும் காரணமாவுள்ள ஆதிப்பிரானும் சிவனே. அவனே நம் பெருமானுமாவன். அவனே விரிந்த வெவ்வேறுலகம் அனைத்தினுக்கும் பேரொளிப் பிழம்பாகவுள்ளான். ஞாயிறு, திங்கள், தீ என்னும் முச்சுடருக்கும் உள்ளொளியாக நின்று ஒளி யருள்பவனும் அவனே. ஆதியாகிய நடப்பாற்றலை யுடையவனும் அவனே. அவனே கீழ்மேல் அண்டங்கள் அனைத்திற்கும் அப்பாலுள்ளவன். அவன் 'சிவசிவ' என்னும் ஒப்பில் பெருமறையுள் நடுவாகி நிற்பது போலவும், ஆருயிர்களின் நெஞ்சகத்து நிற்பது போலவும், தில்லைப் பொன்னம்பலத்து நிற்பது போலவும் எங்கும் நடுவாகி நின்றருள்கின்றனன். இனி நடுவுநிலை குன்றாது நின்றருள்கின்றனன் என்பதூஉம் ஒன்று.

(அ. சி.) சுடர் மூன்று - இரவி, மதி, தீ. அண்டத்தப்புறம் - இப்பூமி சுற்றிவரும் அண்டத்துக்கு அப்பாற்பட்ட. நாம் பார்க்கும் சூரியனும் சூரியனைச் சுற்றி ஓடுகின்ற கிரகங்களும் சேர்ந்தது ஒரு அண்டம். இப்படிப் பல அண்டங்கள் இவ் வண்டத்துக்கு மேலும் கீழும் பக்கங்களிலும் உள்ளன.

(23)

2963. அண்டங் கடந்துயர்ந் தோங்கும் பெருமையன்
பிண்டங் கடந்த பிறவிச் சிறுமையன்
தொண்டர் நடந்த கனைகழல் காண்டொறுந்
தொண்டர்கள் தூய்நெறி தூங்கிநின் 1றானன்றே.

(ப. இ.) அண்டங்கள் அனைத்தையும் கடந்து அப்பாலாய் உயர்ந்தோங்கும் பெருமையுடையவன் சிவன். இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கிப் பிறப்புக்கு உட்படாத நுண்மையனும் அவனே. மேலும் மால் முதலான தெய்வங்கள் பிறந்திறந்துழலும் பெற்றியன. அச்சிறுதெய்வங்களை மயக்கத்தால் தொழும் அவர்கள், தம் கடவுளர் பிறப்பதினாலேயே பேராப் பெருமையுடையவரென்கின்றனர். இவ்வுண்மை "உடல்சுமந்துழலுமக் கடவுளர்க் கல்லதை. பிறவியின் துயர்நினக் கறிவரிதாகலின் அருளாதொழிந்தனை போலும் கருணையிற் பொலிந்த கண்ணுதலேயோ" என்பதனாற் பெறப்படும். அத்தகைய பிறவி எடுக்கும் பிணிப்பு இல்லாதவன் சிவனாகலின் நகைச்சுவை தோன்ற பிறப்பில்லாச் சிறுமையன் என்றனர். தொண்டர் அருளால் நடந்து கண்ட ஆண்மைக் கழலணிந்த ஆண்டவன் சிவன். அவ் வொலிக்கும் கழலிணையைக் கொண்டாறும் தொண்டர் அளவிலா இன்பம் எய்துவர். அத்தொண்டர்க்குத் தூநெறியாக நிற்பவனும் அவனே. அத் தூநெறிக்கண் தங்கி அருள்பவனும் தானே.

(அ. சி.) பின் . . . . . சிறுமையன் - பிறப்பற்றவன். தூங்கி - பொருந்தி.

(24)


1. தொண்டர்க்குத். அப்பர், 6, 79 - 1.

" கருந்தாது. குமரகுருபரர், திருவாரூர்-நான்- 17.