164
 

8. அடி முடி தேடல்

358. பிரமனும் மாலும் பிரானேநான் என்னப்
பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே
பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க
அரனடி தேடி அரற்றுகின் றாரே.1

(ப. இ.) சிற்றுயிரினமாகிய பிரமனும் மாலும் தவப்பேற்றால் முறையே படைத்தல் காத்தல்களாகிய தொழிலைப் புரிகின்றனர். அதுவும் சிவபெருமானின் திருவருளாணையே யாகும். ஆனால் அவர்கள் இருவரும் அத் தொழில் மேம்பாடு தங்கள் வன்மையாலாயதென்று அனைத்தையும் கெடுக்கும் புல்லறிவால் நினைத்தனர். அதனால் அறன்கடை நின்ற பேதையராயினர். அப் பேதைமைச் செருக்கால் மாலும் நான்முகனும் தனித்தனியே தாந்தாம் முதற்பொருளென்று வழக்கிட்டனர். அவர்தம் பேதைமைக்கிரங்கிய சிவபெருமான் அவர்கள் நடுவில் மண்ணுக்குக் கீழும் விண்ணுக்கு மேலும் இடையீடின்றி ஒன்றாய் முளைத்துத் தோன்றித் திகழும் பேரொளிப் பிழம்பாய் நின்றனன். நிற்க மாலும் அயனும் முறையே அடியும் முடியும் தேடித் தங்கள் முதன்மையை நிலைநாட்ட அரற்றுவாராயினர். வழக்கிடுதல் - வாதாடுதல்.

(1)

359. அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேன்என் றச்சுதன் சொல்ல
முடிகண்டேன் என்றயன் பொய்மொழிந் தானே.

(ப. இ.) அடிமுடி காணும் பொருட்டு மாலும் அயனும் முயன்றனர். முயன்று இழிவாகுங் கருவிலங்கும் பறவையுமாய்த் தோன்றினர். கருவிலங்கு - பன்றி. பறவை - அன்னம். கருமை - மயக்கும் மாயையின் அறியாமை நிறம். வெண்மை - இயக்கும் மாயையின் அறிவின் நிறம். பன்றி உருவெடுத்த அச்சுதனாகிய மால் அடிதேடப் போயினன். அன்னவுரு வெடுத்த அயன் முடிதேடப் போயினன். இருவரும் ஆற்றலழிந்து துன்புற்றுத் தேடமுடியாது வாடி நிலத்தே மீண்டனர். அச்சுதன் அடிகண்டிலேன் என உண்மை உரைத்தனன். ஆனால் அயனோ முடிகண்டுள்ளேன் என்று படுபொய் யுரைத்து வடுவுற்றனன். நன்றியில் செல்வரினும் கன்றிய புல்லறிவாளர் பொய்ம் மொழிக்கஞ்சாக் கையர் ஆவர்போலும். படிகண்டிலர் - கருதிய வண்ணம் பார்த்திலர். மயக்கும் மாயை - மூலப்பகுதி. இயக்கும் மாயை - தூவாமாயை.

(2)

360. ஆமே ழுலகுற நின்றஎம் அண்ணலுந்
தாமே ழுலகில் தழற்பிழம் பாய்நிற்கும்
வானே ழுலகுறும் மாமணி கண்டனை
நானே அறிந்தேன் அவன்ஆண்மை யாலே.2


1. பிரம. 8. திருத்தோணோக்கம், 12.

2. மேவிய. 11. பட்டினத். திருவிடை. மும் - 13.