9. படைப்பு 368. ஆதியோ டந்தம் இலாத பராபரம் போதம தாகப் புணரும் பராபரை1 சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாந் தீதில் பரையதன் பால்திகழ் நாதமே. (ப. இ.) தொடக்கமும் ஈறும், பிறப்பும் இறப்பும், எழுவாயும் இறுவாயும் ஆகிய ஆதியோடு அந்தமும் இலாத விழுமிய முழுமுதற் பெரும் பொருள் சிவபெருமான். அச் சிவபெருமானுக்குத் திருவுடலாய்ப் புணரும் பேரறிவுப் பெரும் பொருள் பராபரை எனப்படும். பராபரை என்பதும் பராசத்தி என்பதும் ஒன்றே. அதுவே வனப்பாற்றலெனப்படும். அவ் வனப்பாற்றல் அளவில் பேரொளியாய்த் திகழும். அப் பேரொளியினின்றும் அப்பாலாம் சிவம் தோன்றும். அப்பாலாம் சிவம் துரியாதீத சிவன் எனப்படும். அதனையே பரம் என்பர். அச் சிவன் தோன்றுதற்கு நிலைக்களமாக முதற்கண் ஓசையாகிய நாதம் தோன்றும். பரை திருவருளாணை. (1) 369. நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில் தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவே பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால் வாதித்த விச்சையில்2 வந்தெழும் விந்துவே. (ப. இ.) மேலோதிய ஓசையாகிய நாதத்தினின்றும் ஒளியாகிய விந்து தோன்றும். ஓசை செவிக்குப் புலனாவது. ஒளி கண்ணுக்குப் புலனாவது. அது வரிவடிவம். நாதவிந்துக்களாகிய இருமெய்களினின்றும் முறையே சிவன் சிவை என்னும் மெய்கள் தோன்றும். சிவன் பால் நின்று பேரறிவும், சிவையாகிய சத்தியினின்று பேராற்றலும் வெளிப்படும். பேரன்பு எனப்படும் இச்சை, என்றும் ஒன்றுபோல் நிற்பதென ஆய்ந்து நிலைநிறுத்தப்பட்டது. அவ் விச்சை விந்துவில் நின்றும் தோன்றும். 'இச்சையில் வந்தெழும் விந்துவே' என்பதில் விந்துவில் இச்சை வந்தெழும் என மாறுக. தீதற்றகம் வந்த என்பதற்கு மலமாசகன்ற அன்பர் உள்ளத்தில் தோன்றிய என்றலும் ஒன்று. (2) 370. இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக் கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும் வல்லது ஆக வழிசெய்த அப்பொருள் சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே. (ப. இ.) உலகு உடல் உண்பொருள்களாகிய காரியம் தோன்றுதற்கு இடமெனப்படும் இல்லாயுள்ளது மாயை. உள்ளதாகிய அம் மாயை சத்தியால் காரியப்படும். அதனால் அம் மாயையையினைச் சத்தியிடந்தனில் உண்டாகி என்றனர். சத்தியும் சிவனும் மணியும் ஒளியும்போலக்
1. சத்திதன். சிவஞான சித்தியார், 1. 3 - 3. 2. ஞானமே. " " " 5.
|