381. நின்றுயி ராக்கு நிமலன்என் னாருயிர் ஒன்றுயி ராக்கும் அளவை உடலுற முன்துய ராக்கும் உடற்குந் துணையதா நன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே.1 (ப. இ.) உயிர்க்கு உயிராய் நின்று எல்லாவற்றையும் இயைந்து இயக்கும் சிவபெருமான் இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கியவன். அவனே என் ஆருயிராக உள்ளான். ஆருயிர்களை அன்பு செய்தற்குக் கருவியாகிய உடலுடன் ஒன்றும்படி பொருத்துபவனும் அவனே. அக்காலத்து அவ்வுயிர்கள் முன் செய்து கொண்ட வினைக்கீடாகப் 'பேறு, இழவு, இன்பம், பிணி, மூப்புச் சாக்காடு' என்னும் ஆறும் அவ்வுயிர்களுக்குக் கருவினுள் அமையப் படைத்தருள்வன். இவையே அவ்வுயிர்களைத் துன்புறுத்தும் உடலுக்குத் துணையாவன. அச் சிவபெருமான் ஆருயிர்களின் 'உயிர்ப்பாய்ப் புறம்போந்து புக்கு' நின்றருள்வன். அவன் அனைத்திற்கும் காவலாய் நடுவு நின்றருளினன். உயிர்ப்பான் - உயிர் மூச்சாய் விளங்குவான். (அ. சி.) ஒன்று . . . உடலுற - உயிரை உடலோடு சேர்க்கும்போது. முன் துயராக்கும் உடற்கு - ஊழின்படி படைக்கும் உடலுளி. (14) 382. ஆகின்ற தன்மையில் அக்கணி கொன்றையன் வேகின்ற செம்பொனின் மேலணி மேனியன் போகின்ற சீவன் புகுந்துட லாய்உளன் ஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே.2 (ப. இ.) சொல்லுலகும் பொருளுலகும் ஆகிய அனைத்தும் சிவபெருமான் திருவருளால் மீண்டும் தோன்றும். அக் காலத்து அவன் சிவமணியும் கொன்றை மாலையும் அணிந்தவனாய்த் திகழ்வன். அவன் திருமேனி புடமிட்டு எடுத்த செவ்விப் பொன்போலும் மிக்க அழகு வாய்ந்தது. பேரொடுக்கக் காலத்து உலகினையும் உடம்பினையும் ஒருங்கு நீங்கிச் செல்லும் ஆவிகளுக்கு நிலைக்களமாகிய உடலாகவுள்ளவனும் சிவபெருமானே. எக் காலத்தும் யாண்டும் ஆருயிர்கட்கு ஏர்மிக்க சீர்சிறப்புச் செய்வித்தருளும் ஆளும் தன்மை வாய்ந்த அண்ணலும் சிவபெருமானே. ஆகின்ற தன்மையில் - உலகம் உண்டாதற் பொருட்டு. அக்கு சிவமணி; உருத்திராக்கம்; எலும்பெனலுமாம். மேலணி - மேலான அழகிய. (15) 383. ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார் இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்3 பருவங்கள் தோறும் பயன்பல வான திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே.
1. என்னி. அப்பர், 5. 21 - 1. 2. அழிப்பிளைப், சிவஞானசித்தியார், 1. 2 - 17. 3. ஏற்றவிவை. சிவப்பிரகாசம், 1. 6. " சத்தியும். சிவஞான சித்தியார், 1. 3 - 10.
|