தத்துவத்து மலவாசனையுடையாராய்க் கீழுள்ள குணதத்துவத்திருந்து திருவாணைவழி படைத்தல், காத்தல், துடைத்தல்களைப் புரியும் அயன் அரி அரன் வானவர்கோன் முதலாயினாரைத் தூண்டித் தொழிற்படுத்தும் அரன் அரி அயன் வேந்தன் முதலியோராகிய உயிர்ப்பாலார் உறைவர். இந் நிலைகளனைத்தும் முழுமுதற் சிவபெருமான் புரிந்தருளும் ஐந்தொழிலால் தூமாயையாகிய விந்துவினின்றும் அமைப்புமுறைப் பகுப்பாம் விருத்தியாய்த் தோன்றும். இவர்களனைவரும் மலப்பசையுடையவரே. அக்கருத்தால் ஆணவம் நீங்காதவரென்றனர். அமைப்புமுறைப் பகுப்பு - விருத்தி; பகுப்பமைப்பு. (அ. சி.) ஆணவ...ஐவர் - ஆணவமலம் ஒன்றுடைய அணுபட்ச சதாசிவராதி ஐவர். காரிய காரண ஈசர் - அணுபட்ச சம்புபட்சத்தார். விந்து - சுத்த மாயை. (18) 386. உற்றமுப் பாலொன்று மாயாள் உதயமா மற்றைய மூன்று மாயோ தயம்விந்து பெற்றவன் நாதம் பரையிற் பிறத்தலால் துற்ற பரசிவன் தொல்விளை யாட்டிதே. (ப. இ.) அருஞ்சைவர் தத்துவம் முப்பத்தாறனுள் நிலமுதல் மாயையீறாகிய தத்துவம் முப்பத்தொன்று. இம் முப்பத்தொன்றும் தூவாமாயை என்று சொல்லப்படும். இக் கருத்தினுக்குப் பாடம் 'முப்பானொன்று' என்றிருத்தல் வேண்டும். அங்ஙனம் கொண்டால், மற்றை மூன்றாகிய ஆசான்மெய் ஆண்டான்மெய் அருளோன்மெய் என்னும் மூன்றும் தூமாயையின் விளக்கங்களாகும். அதன்மேல் விந்து. இவ் விந்து நாதத்தில் தோன்றும். நாதம் பரைநிறைவில் தோன்றும். இவை அனைத்தும் சிவபெருமான் பரையில் பொருந்துவதால் தோன்றுவன. இனி முப்பால் படைத்தல் காத்தல் துடைத்தல் ஆகிய தொழிலுக்குரிய முப் பண்புகளென்றலும் ஒன்று. இம் முப்பண்புகள் மூலப்பகுதியில் தோன்றுவன. இவை அமைதி ஆட்சி அழுந்தல் எனக் கூறுப. இவற்றை முறையே சத்துவம் இராசதம் தாமதம் என்ப. இம் மாயையின் குணம் காரியக் கடவுளர்க்கு உள்ளன. உணர்த்துமெய், உணர்வுமெய், உடன்மெய் ஆகிய மூன்றும் காரண மாயையில் தோன்றுவன. இம் மூன்றும் முறையே விந்து மோகினி மான் என்று சொல்லப்படும். விந்து - தூமாயை. மோகினி - தூவாமாயை. மான் - மூலப்பகுதி. விந்து நாதத்தில் தோன்றும். நாதம் திருவருள் நிறைவில் தோன்றும். இவையனைத்தும் நீக்கமறக் கலந்து வேறற நிற்கும் பரசிவத்தின் தொன்மைத் திருவிளையாட்டென்ப. காரியக் கடவுளர் உயிர்ப் பகுதியினர். பரையில் - திருவருளாணை இயைந்தியக்கலால். (அ. சி.) முப்பால் - முக்குணம். உமையாளுதயம் - சிற்சத்தியிடத்துத் தோன்றும். (19) 387. ஆகாய மாதி சதாசிவ ராதியென்1 போகாத சத்தியுட் போந்துடன் போந்தனர் மாகாய ஈசன் அரன்மால் பிரமனாம் ஆகாயம் பூமி காண அளித்தலே.
1. குறிகள்வச. சிவஞானசித்தியார், 2. 3 - 18.
|