432. ஆதி படைத்தனன் ஐம்பெரும் பூதம் ஆதி படைத்தனன் ஆசில்பல் ஊழி ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை ஆதி படைத்தவை தாங்கிநின் றானே. (ப. இ.) எவற்றிற்கும் வினைமுதற்காரணமாயுள்ள சிவபெருமான் ஆதியென்று அழைக்கப்படுவன். அத்தகைய ஆதி ஐம்பெரும் பூதங்களையும் படைத்தருளினன். அவனே ஆருயிர்களின் மலகன்ம மாயைக் குற்றங்கள் நீங்குதற்கு வாயிலாகிய பல ஊழிகளையும் படைத்தருளினன். அவனே 'நால்வே றியற்கைப் பதினொரு மூவரொடு' கூடிய அளவில்லாத தேவர்களையும் படைத்தருளினன். இங்ஙனம் படைத்தவை அனைத்தையும் தாங்கிக் காத்தருள்பவனும் அவனே. படைத்தலென்பது உயிர்களுக்கு உடல்கலன் உலகுகளைப் படைத்து அவ்வுயிர்களை அவற்றுடன் பொருத்தி வினைக்கீடாக நடத்துவதே யாகும். ஆதி - அம்மை; அம்மையுடன் கூடிய சிவபெருமான். (7) 433. அகன்றான் அகலிடம் ஏழுமொன் றாகி இவன்றா னெனநின் றெளியனும் அல்லன் சிவன்றான் பலபல சீவனும் ஆகி நவின்றான் உலகுறு நம்பனு1 மாமே. (ப. இ.) சிவபெருமான் கலப்பினால் விரிந்த உலகங்கள் ஏழுடனும் ஒன்றாகி., நீக்கமற நிறைந்து நின்றனன். அகலுதல் - செறிதல்; நிறைதல். இறைவன் அங்ஙனம் கலந்து நிற்பினும் இவன்தான் இறைவன் என்று சுட்டியுணர்த்தப்படக் கூடிய அத்துணை எளியனும் அல்லன். அதுபோலவே அவன் கலப்பினால் ஆருயிர்களுடன் ஒன்றாகி நீக்கமறநிற்கின்றனன். அதனால் பலபல சீவனும் ஆகி என்றனர். சிவபெருமானே சிவகுருவாய் வந்தருளி வழிவகைகளை நவின்றருளினன். சீவனுமாகி, என்பது உயிர்க்குத் துணையாய் உடனாகி நின்றருளி என்பதாகும். நம்பன் - சிவபெருமான். நம்புவார்களுடைய நம்பிக்கைக்கு முழு உரிமை வாய்ந்தவன் நம்பன். (8) 434. உண்ணின்ற சோதி உறநின்ற ஒருடல் விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள் மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன் கண்ணின்ற மாமணி2 மாபோத மாமே. (ப. இ.) அனைத்துயிர்க்கும் உயிராய் உள்நின்று ஊக்கும் சிவபெருமான் அவ்வுயிர்களைத் தாங்குகின்றனன். அதனால் அவன் ஒப்பில்லா உடல் போன்றவனாகின்றனன். அவன் பேரொளியாய்த் திகழ்கின்றனன். யாவரும் யாவையும் தன்பால் நிலவ நின்றருளினவனும் சிவபெருமானே. விண்ணின்கண் வாழும் அமரர்களும் விரும்பும் விழுத்துணைப் பெரும்பொருள் சிவபெருமான். நிலவுகத்துவாழும்
1. நம்பு. சம்பந்தர், 3 - 49 - 2. 2. திருவேயென். அப்பர், 6. 47 - 1.
|