(ப. இ.) மலப்பசை ஒன்று மட்டும் பொருந்துவோர் மெய்யுணர்வினராவர்; அவர் மூவகையினர். (ஆவியருளோன், அறிவுக் கடவுளர் எண்மர், எழுகோடி மந்திரத் தலைவர்.) விஞ்ஞான...இருமலர் - தூமாயையில் தங்கும் இருமலத்தாரும் மூவகையினர். (குறைசெவ்வியுடையார், விழுப்பேற்றினர், வழிப்பேற்றினர்.) அஞ்ஞான ...சகலராம் - தூவாமாயையில் உள்ள மும்மலமுடையாரும் மூவகையினர். (மட்டமானவர், விரைவானவர், மிகுவிரைவானவர்; மந்தர், தீவிரர், தீவிரதரர்.) விஞ்ஞான ...உயிர்களே - மேலே கூறிய மூவகை ஒன்பது பிரிவாம் உயிர்கள். விஞ்ஞானர் - தூமாயையினர். அஞ்ஞானர் - தூவாமாயையினர். (7) 482. விஞ்ஞான கன்மத்தால் மெய்யகங் கூடிய அஞ்ஞான கன்மத்தி னால்சுவர் யோனிபுக் கெஞ்ஞான மெய்தீண்டி யேயிடை யிட்டுப்போய் மெய்ஞ்ஞான ராகிச் சிவமேவல் உண்மையே. (ப. இ.) விஞ்ஞான கன்மத்தர் - மேலான ஞானகன்மத்தைப் புரிபவர். அஞ்ஞானகன்மத்தினால் - அந்த ஞானகன்மம் புரிவதாலே. சுவர்யோனி - தேவப்பிறப்பு. எஞ்ஞானம் - மேலெழும் ஞானம். (எஞ்ஞானம் என்பது எவ்வுஞானம் என்பதன் குறைவாகும்.) எவ்வுதல் - மேலெழுதல். மெய்யுணர்வு கைவந்த தவத்தோர் அறிவுநிலையினராய்ச் சிவன் திருவடியைக் கூடுதல் மெய்ம்மையே. (8) 483. ஆணவந் துற்ற வவித்தா நனவற்றோர் காணிய விந்துவா நாத சகலாதி ஆணவ மாதி யடைந்தோ ரவரன்றே சேணுயர் சத்தி சிவதத் துவமாமே. (ப. இ.) ஆணவத்தால் பொருந்திய மறைப்பு நனவில்லாதார் காணும் பொருட்டு விந்துநாதம் ஆணவமாதி அடைந்தோராவர். எல்லாவற்றுக்கு மேலாக அன்னை மெய்யும் அத்தன் மெய்யும் உள்ளன. அன்னை - சத்தி. அத்தன் - சிவன். ஆணவந்துற்ற - ஒட்டாய்ப் பொருந்திய பழமலம். அவித்தாம் நனவு - மறைபட்ட நனவு. (அவித்து - மறைவு) அற்றோர் - மருள் நனவு நீங்கினோர். சகலாதி - புணர்வாகிய உடல் கலன் உலகம் ஊண் முதலியன. ஆணவமாதி அடைந்தோர் - ஆணவ முதலியன நீங்கினோர். சேணுயர் - மிகத் தொலைவாகிய. (அ. சி.) அவித்து ஆம் நனவு - மண்பட்ட அறிவு. விந்து ஆம் நாதம் - விந்துவைப் படைக்கின்ற நாதம். (9)
|