225
 

19. திருக்கோயில்

498 .தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே அரசு நிலைகெடுஞ்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே.1

(ப. இ.) 'தழைத்ததோ ராத்தியின்கீழ்த் தாபரம் மணலாற் கூப்பி' என்பதனால் செந்தமிழ்ச் செந்நெறியாளரின் சீரிய வழிபாடு நாரிபாகன் தன் சிறந்த திருவுருவமாகிய செந்தழல் அடையாளமாம் சிவக்கொழுந்தின் வழிபாடாகும். இதுவே அருவுருவத் திருவுரு இதன்கண் எத் திருவுரு நினைவினையும் ஏற்றித் தொழுதற்கிடனுண்டாம். மாவாயிருப்பின் அவரவர் மனமிசைந்த உருவுடைப் பண்டமாக்கி யுண்பதும், பொற்கட்டி யாயிருப்பின் வேண்டியவாறு உருவு வேறுபட்ட அணியமைத்தணிந்து அகமகிழ்தலும் இதற்கொப்பாகும். எல்லா நினைவுக்கும் நிலைக்களமாக நிலையுற்றதென்னும் பொருளில் தாவரம் என்றனர். வேற்று நெறியாளர் ஆற்றாப் பகைமையால் அத் தாவரத்தைப் பறித்தெடுத்து ஆண்டு வேறொன்றைக்கொண்டு நிலைநாட்டுவர். அங்ஙனம் செய்வதனை வேந்தன் முன்னறிந்து ஆந்துணையும் தடுத்தல்வேண்டும். தடாது ஒழியின் புதிதாக நாட்டப்புகுந்தவுருவு நாட்டி முடிவதன் முன்னம், வேந்தனும் வேந்து இடைமுரிந்து கெடும். மாண்டு மடிவதன்முன்னே தீண்டற்கும் காண்டற்கும் ஒவ்வாத் தொழுநோயராய்ப் பெருந்துன்பத்தழுந்துவர். அனைத்துலக நன்மைக்கும் நினைப்பரிய காவலனாய் நீடுவிளங்கும் நந்திப்பேர்சேர் நமசிவயத்தன் கட்டுரையாய் நவின்றருளினன். பறித்து - பிடுங்கி. ஒன்றில் - வேறொன்றை. தாபித்தால் - அங்கே நிலைநாட்டினால். ஆவதன் முன்னே - அப்படி நாட்டிய உருவம் நிலைப்படுவதன் முன்னே. பெருநோய் - அருவருக்கத்தகுந்த தொழுநோய். பேர் நந்தி - முழுமுதற் பெருங்கடவுள்.

(1)

499. கட்டுவித் தார்மதிற்-கல்லொன்று வாங்கிடில்
வெட்டுவிக் கும்அபி டேகத் தரசரை
முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும்
வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே

(ப. இ.) கட்டுவித்து ஆர் மதில் - செந்நெறிச்செல்வர்களால் கட்டுவிக்கப்பெற்று உயர்வு அகலம் திண்மை அருமை என்னும் நான்கினாலும் சிறந்து காட்சிக்கு இனிமையாக என்றும் நின்று நிலவும் திருக்கோயில் திருமதில். வாங்கிடில் - ஒரு சிறு துண்டுக்கல் நீக்கப்பட்டால். வெட்டுவிக்கும் - நீக்கியவர்களை அழிவிக்கும். அபிடேகத்தரசர் - திருமுடி சூடிய வேந்தர். முட்டுவிக்கும் - இடருறச்செய்யும்: விண்ணவன் - பரவெளியாகிய சிவபெருமான்.

(2)

500. ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்திருக் கோயில்க ளெல்லாஞ்
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.


1. வாயிருந். அப்பர். 5. 58 - 9.

" ஆனை. 12. திருநாவுக்கரசர், 299.