293
 

(ப. இ.) (பானுவில் விடுதல்: அமுதத்தை இணைவிழைவுச் சூட்டால் வெளிப்படுத்தல்.) முயங்கில் - அகத்தவமாம் யோகத்தில் பொருந்தியிருந்தால். அணிந்த - புகழ்ந்து கூறப்பட்ட. அணிமா - நுண்மை. கைதானாம் - தானாக எளிதாகக் கைகூடும். தணிந்த - மெலிந்த. நொய்யதாகி - மெலிவாகி. மெலிந்தங்கிருந்திடும் - இலேசாயங்கிருப்பன். இந்நிலை ஓராண்டில் கைகூடும்.

(அ. சி.) முடிந்திட்டு வைத்து - அமுதத்தைப் பானுவில் விடாமல் அடக்கிவைத்து.

(34)

இலகிமா
(மென்மை)

654. ஆகின்ற வத்தனி நாயகி தன்னுடன்
போகின்ற தத்துவம் எங்கும் புகலதாய்ச்
சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்
மாய்கின்ற தையாண்டின் மாலகு வாகுமே.

(ப. இ.) திருவருள் துணையுடன் முதல்நிலையாகிய மூலாதாரத்தினின்றும் மேலேறும் எல்லா நிலைகளிலும், அத் திருவருளாற்றலே துணையாக. சாய்கின்ற....வாகுமே - ஐந்தாண்டுப்பயிற்சியில் மிக்க மென்மையாகிய இலகிமா கைகூடும்.

(அ. சி.) போகின்ற தத்துவம் - மூலாதாரத்தினின்றும் தான் போகும் தத்துவங்கள். புகலதாய் - அச் சத்தியே ஆதாரமாக.

(35)

655. மாலகு வாகிய மாயனைக் கண்டபின்
தானொளி யாகித் தழைத்தங் கிருந்திடும்
பாலொளி யாகிப் பரந்தெங்கு நின்றது
மேலொளி யாகிய மெய்ப்பொருள் காணுமே.

(ப. இ.) மாலகுவாகிய - பெருமையுள்ள மென்மை வடிவினனான. மாயனை - முழுமுதற் சிவனை. தானொளியாகி - இயற்கைப் பேரொளியாய். மேலொளி - பரவெளியிலமர்ந்த. மெய்ப்பொருள் - முழு முதற்சிவம். அச்சிவம் ஆண்டுக் காணப்படும்.

(அ. சி.) மாலகு - லகிமா.

(36)

மகிமா
(பருமை)

656. மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன்
தற்பொரு ளாகிய தத்துவங் கூடிடக்
கைப்பொரு ளாகக் கலந்திடு மோராண்டின்
மைப்பொரு ளாகு மகிமாவ தாகுமே.