(ப. இ.) நெற்றிநடுவில் முக்கோண வடிவிற்றாய்ச் சிவபெருமான் வீற்றிருப்பது அவனருளால் அடியேனால் காணப்பட்டதாகும். மேலும் கலை நான்கும் உயிர்ப்பு ஏழும் காணப்பெற்றேன். அதனால் திருவடியுணர்வே உய்யுமருந்தாக உடம்பகத்துக் கண்டுகொண்டேன். மான் கன்றனைய ஆவி உடம்பகத்து நின்று வளருகின்றது. (அ. சி.) நான் கண்ட வன்னி - சிவன். நாலு கலை - ஓமரூபி, அகந்தை, நாதை, அநாதை ஏழு - வாயு ஏழு; பஞ்சப் பிராணனோடு இடகலை பிங்கலை. மான்கன்று - சீவன். (15) 719. ஆகுஞ் சனவேத சத்தியை அன்புற நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப் பாகு படுத்திப் பலகோடி களத்தினால் ஊழ்கொண்ட மந்திரந் தன்னால் ஒடுங்கே. (ப. இ.) ஆவிகளை நன்னெறிப்படுத்த உடனாயுறைந்து நடத்துவிக்கும் மறைப்பாற்றலினிடத்து அவ்வாற்றல் வனப்பாற்றலாக மாறும் படி அவ் ஆவிகள் அன்புசெய்தால், நெல்வித்து ஒன்று ஆயிரக்கணக்காகப் பல்குவதுபோன்று மீட்டும் மீட்டும் வினைக்கீடாகப் பெருகி வரும் உடம்புகளின் எல்லை முடிவு எய்தும். திருவைந்தெழுத்தின் முதலெழுத்தாகிய பேசா எழுத்தின்கண் ஆவி ஒடுங்குதல் முறையாம். பேசா எழுத்து - சிகரம். இதனையே அசபை என்பர். (அ. சி.) சனவேதசத்தி - திரோதாயி. நெல்...மையை - ஒரு நெல்லினின்றும் பல நெல் உற்பத்தியாதல் ஒப்ப. ஊழ்கொண்ட மந்திரம் - அசபா மந்திரம். (16)
14. கால சக்கரம் 720. மதிவட்ட மாக வரையைந்து நாடி இதுவிட்டிங் கீரா றமர்ந்த அதனாற் பதிவட்டத் துள்நின்று பாலிக்குமாறு மதுவிட்டுப் போமாறு மாயலுற் றேனே. (ப. இ.) பன்னிருவிரல் பெருவெளியாகிய மதி எல்லையாகப் புருவ நடுவிலுள்ள மேருவின்கண் ஐந்துநாடிகள் கூடுமிடத்தினின்று நீங்கி நெஞ்சின்கண் பன்னிரண்டு விரல் உயிர்ப்புடன் கூடியிருந்ததனால், சிவன் எழுந்தருளியிருக்கும் பெருவெளியில் தோன்றும் மாறா இன்பத்தேனைப் பருகினேன்; பருக உலகப் பழக்கம். நீங்கிற்று; நீங்கச் சிவனடிக்கீழ் மறைந்தேன். (அ. சி.) மதிவட்டம் - சகசிர அறை. வரை - புருவமத்தி. பதி வட்டம் - சிவம் இருக்கும் இடம். மது - அமுதம். (1)
|