316
 

726. ஆறும் இருபதுக் கையைந்து மூன்றுக்குந்
தேறு மிரண்டு மிருபத்தொ டாறிவை
கூறு மதியொன் றினுக்கிரு பத்தேழு
வேறு பதியங்க ணாள்விதித் தானே.1

(ப. இ.) அகத்தவப்பயிற்சியுடையார்க்கு உலகியல் நாட்கள் போன்று அமையாமல் இருபதும் இருபத்தைந்தும் உறழ ஐஞ்ஞூறு ஆகும். இவற்றை ஆறால் உறழ மூவாயிரமாகும். நமக்கு மூவாயிரம் நாட்கள் சென்றால் அவர்கள் நிலைக்கு ஆறுநாட்களா யமையும் போலும். இத்தகைய நிலையினர் ஒருசாரார். வேறு ஒருசாரருக்கு நமக்கு நூற்றறுபத்தாறு நாள்கள் ஒருநாளாகும். மதிவட்டம் வரும் இருபத்தேழு நாட்களும் இவ்வாறு விதித்தனன் என்க.

(7)

727. விதித்த இருபத்தெட் டொடுமூன் றறையாகத்
தொகுத்தறி முப்பத்து மூன்று தொகுமின்
பதித்தெறி பத்தெட்டும் பாரா திகணால்
உதித்தறி மூன்றிரண் டொன்றின் முறையே.

(ப. இ.) இதில் குறித்து ஓதப்பட்டுள்ள எண்முறைகளும் மேலது போன்றோ வேறோ விளங்கவில்லை. இவ் விரண்டு திருப்பாட்டுக்களின் பொருள் நுட்பங்கள் வல்லார்வாய்க் கேட்டுணர்வதே வாய்ப்பாகும்.

(8)

728. முறைமுறை யாய்ந்து முயன்றில ராகில்
இறையிறை யார்க்கும் இருக்க அரிது
மறையது காரண மற்றொன்று மில்லை
பறையறை யாது பணிந்து முடியே.

(ப. இ.) உடலோடு கூடி நெடுநாள் இருக்க முயல்வார் முறை முறையாக உயிர்ப்படக்குவதில் பழகுதல் வேண்டும். அங்ஙனம் முயலாவிட்டால் உலகக்கணக்கின்படி வாழ்நாள் முடிவில் ஒருசிறிதும் கூடுதலாக இருக்கமுடியாது. இம் மறைபொருளைப் பறைபோல் வெளிப்படுத்தாது பணிவுடன் பயின்று வாழ்நாளைப் பெருக்குக.

(அ. சி.) இறை - கொஞ்சம். மறை - மறைந்த. பறை அறையாது - வெளிப்படுத்தாது.

(9)

729. முடிந்த தறியார் முயல்கின்ற மூர்க்கர்
இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டு
கடிந்தனன் மூளக் கதுவவல் லார்க்கு
நடந்திடும் பாரினில் நண்ணலு மாமே.

(ப. இ.) உடம்பை நிலைத்திருக்கச் செய்யும் முறைகளை மறைத்து வைத்துள்ள தன்மையை அறியாது முயல்கின்றவர் மூர்க்கர் எனப்படுவர். உடம்பு நிலைத்திருக்க விரும்புவோர் மூலத்தீயின்கண்


1. நூறு, அப்பர், 5. 100 - 3.