326
 

(ப. இ.) இருபது ஓடினால் அறுவகை நிலைகள் காணலாகும். இருபத்தைந்தேல் மூவகை நிலைகளாகும். இருபத்தாறேல் இரண்டு நிலைகள் காணலாகும்.

(12)

762. காட்டலு மாகுங் கலந்திரு பத்தேழில்
காட்டலு மாகுங் கலந்தெழும் ஒன்றெனக்
காட்டலு மாகுங் கலந்திரு பத்தெட்டிற்
காட்டலு மாகுங் கலந்தஈ ரைந்தே.

(ப. இ.) இருபத்தேழில் கலந்து தோன்றும் ஒருநிலை காணலாம். இருபத்தெட்டில் ஏழுநிலைகள் காணலாம்.

(13)

763. ஈரைந்தும் ஐந்தும் இருமூன்றும் எட்டுக்கும்
பாரஞ்சி நின்ற பகைபத்து நாளாகும்
வாரஞ்செய் கின்ற வகையாறஞ் சாமாகில்
ஓரஞ்சொ டொன்றொன் றெனவொன்று நாளே.

(ப. இ.) இருபத்தொன்பதானால் பத்துநாட்களுக்குள் பகையாகும். முப்பதாகில் ஏழுநாட்களுள் பகையாகும்.

(14)

764. ஒன்றிய நாள்கள் ஒருமுப்பத் தொன்றாகிற்
கன்றிய நாளுங் கருத்துற மூன்றாகுஞ்
சென்றுயிர் நாலெட்டுஞ் சேரவே நின்றிடின்
மன்றியல் பாகு மனையில் இரண்டே.

(ப. இ.) பொருந்திய நாட்களில் முப்பத்தொன்றாகில் மூன்று நாட்களுள் கன்றுதல் ஏற்படும். முப்பத்திரண்டு நின்றிடில் இரண்டு நாட்களுக்குள் பொதுமை ஏற்படும்.

(15)

765. மனையில்ஒன் றாகும் மாதமு மூன்றுஞ்
சுனையில்ஒன் றாகத் தொனித்தனன் நந்தி
வினையற வோங்கி வெளிசெய்து நின்றால்
தனையுற நின்ற தலைவனு மாமே.

(ப. இ.) முப்பத்து மூன்றானால் அருளில் ஒன்றுபடும் என நந்தி அருளினன். தற்செயலற்று அருள்வழிநின்றால் தலைவனைச் சாரும் தனி இயல்புண்டாகும். மாதமும் - முப்பதும்: இது தொகைக்குறிப்பு.

(16)

766. ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை
ஆரு மறியார் அளக்கின்ற வாயுவை
ஆரு மறியார் அழிகின்ற அப்பொருள்
ஆரு மறியா அறிவறிந் தேனே.

(ப. இ.) அகத்துக் காணப்படும் தீயை அளப்பதும், காற்றை யளப்பதுமாகிய நிலைகளை யாரும் அறியார். அப் பொருள்கள் அழிவு பாடுடையன என்றும் யாரும் அறியார். அடியேன் திருவருள் துணையால் அவற்றையறியும் அறிவறிந்தேன்.

(17)