21. சந்திர யோகம் 831. எய்து மதிக்கலை1 சூக்கத்தி லேறியே எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள் எய்துங் கலைபோல ஏறி இறங்குமாம் துய்யது சூக்கத்துத் தூலத்த காயமே. (ப. இ.) திங்களுடைய தேய்தலும் வளர்தலுமாகிய இருவகைப் பக்கத்துமுள்ள கலைகள் நுண்மையிலிருந்து பருமையாய் விளங்கற்கும், பருமையிலிருந்து நுண்மையாய் ஒடுங்கி மறைதற்கும் எடுத்துக்காட்டாக இருப்பனபோல் மாந்தர் உடம்பும் நுண்மையிலிருந்து பருமையாய் விளங்குதலும் பருமையிலிருந்து நுண்மையாய் ஒடுங்குதலும் கொள்ளுதல் வேண்டும். உடம்புகள் மலநீக்கத்துக்குத் துணையாக அளித்தருளப்பட்ட விளக்கனைய தூய்மையது; காலவரையறைக்கு உட்பட்டது. (1) 832. ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள் ஆகின்ற ஈரெட்டொ டாறிரண் டீரைந்துள் ஏகின்ற வக்கலை யெல்லா மிடைவழி ஆகின்ற யோகி அறிந்த அறிவே. (ப. இ.) திங்களுக்குரிய கலைகள் பதினாறு. ஞாயிற்றுக்குரிய கலைகள் பன்னிரண்டு தீயினுக்குரிய கலைகள் பத்து. இவைகளை அகமுகப்பயிற்சியால் தெளிந்து நடுநாடியின் வழியாக மேல்நோக்கிச் செலுத்துவர். இதன் பயனாக உடம்பு எழிலுடன் விளங்கும். (அ. சி.) சந்திரன் ஈரெட்டு - சந்திரகலை 16. சூரியன் ஆறிரண்டு - சூரியகலை 12. அங்கி எட்டெட்டு - அக்கினிகலை 64. இடைவழி - இடகலை. (2) 833. ஆறாற தாங்கலை ஆதித்தன் சந்திரன் நாறா நலங்கினார் ஞாலங் கவர்கொளப் பேறாங் கலைமுற்றும் பெருங்காலில் ஈரெட்டு மாறாக் கதிர்கொள்ளு மற்றங்கி கூடவே. (ப. இ.) ஞாயிற்றினுடைய பன்னிரண்டு கலைகளும் திங்களின் வெளியாகச் செலுத்தப்பயின்றவர் உலகோர் உவக்கும் பேற்றினை எய்துவர். உயிர்ப்பினில் இடமூக்கு வலமூக்குகளுக்குரிய பதினாறு கலைகளும் தீயின் கலையுடன் கூடப் புறத்துச் செல்லுவதற்கு மாறாக நடுநாடி வழியிற் செல்லும். பெருங்கால் - உயிர்ப்பு; பிராணவாயு. இடமூக்கு - இடகலை. வலமூக்கு - பிங்கலை. மாறாக் - மாறாக. (அ. சி.) ஆறு ஆறு அதாம் கலை - 12 கலை அளவாகிய. (3)
1. மாயா. சிவஞானபோதம், 4. 2 - 1. " விதிப்படி சிவஞானசித்தியார், 2. 2 - 49.
|