903. ஆயுஞ் சிவாய நமமசி வாயந வாயு நமசிவா யயநம சிவாய1 வாயுமே வாய நமசியெனு மந்திரம்2 ஆயுஞ் சிகாரந் தொட்டந்தத் தடைவிலே. (ப. இ.) இதன்கண் செந்தமிழ்த் திருமறையாம் திருவைந்தெழுத்தினுள் நுண்மையவாய் 'சிவயநம' என்னு மந்திரத்தினை நான்கு முறை எழுத்துக்களை மாற்றியமைக்கும் நிலை ஓதப்படுகின்றது. அந் நான்கும் ஈற்றிலிருந்து முறையே ஒவ்வோர் எழுத்தும் முதலெழுத்தாக எழுதுதல் வேண்டும். அங்ஙனம் எழுதின் திருவம்பலச்சக்கரம் இருபத்தைந்திலும் திருவைந்தெழுத்து அமைந்திருக்கும் உண்மை புலனாகும். மேலும் தொடக்கத்திலும் முடிவிலும் சிகரம் தோன்றும் சிறப்புக் காண்க. முதல் வரியின் கடைசியில் காணப்படும் 'ய ந' என்னும் இரண்டெழுத்தால் ஆயும் உயிரும் அதற்குத் துணையாம் நடப்பாற்றலாகிய திருவருள் துணையும் சிறப்பாகத் தோன்றுமுறை ஓதப்படுகின்றன. அடைவிலே - முறையிலே. (அ. சி.) சிகாரந்....விலே - சிகரம் முதலாக இட்டுக் கடைசிவரையில் மாறும் முறை கூறியது. (10) 904. அடைவினில் ஐம்பதும் ஐயைந் தறையின் அடையும் அறையொன்றுக் கீரெழுத் தாக்கி அடையு மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும் அடைவின் எழுத்தைம்பத் தொன்றும் அமர்ந்ததே. (ப. இ.) இதன்கண் ஐந்தெழுத்துக்கு அமைந்த இருபத்தைந்து அறைகளுள் ஐம்பதெழுத்தும் அமைக்குமுறை ஓதப்படுகின்றது. (அ. சி.) ஐம்பது - க்ஷகரம் நீங்கிய 50 எழுத்துக்கள். ஐயைந்தறையில் அடையும் - அறை ஒன்றுக்கு இரண்டு அக்கரங்களாக 50 அக்கரங்கள். மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும் அடையும் - க்ஷகரத்தைப் பிரணவ வட்டத்து அமைந்த மகரத்தோடும் சேர்த்திடுக. (11) 905. அமர்ந்த அரகர வாம்புற வட்டம் அமர்ந்த அரிகரி யாமத னுள்வட்டம் அமர்ந்த அசபை யாம்அத னுள்வட்டம் அமர்ந்த இரேகையும் ஆகின்ற சூலமே. (ப. இ.) மூன்று வட்டங்களுள் அமைக்கப்பெறும் மந்திரங்கள் இதன்கண் ஓதப்பெறுகின்றன. (அ. சி.) புறவட்டம் - வெளிவட்டம்; இதற்கு அரகர என்றும், அதனுள் வட்டம் - புறவட்டத்தை அடுத்துள்ள வட்டம்; அதற்கு
1. (பாடம்) சிவாயந. 2. பதத்தெழு. அப்பா, 4. 107 - 2. " அந்தியுநண். ஆரூரர். 7. 83 - 1.
|