(ப. இ.) வடபெருங்கல் எனச் சிறப்பிக்கப்படும் திருக்கைலாய மலையை உறைவிடமாகக் கொண்டவன், ஆங்குப் போகமருளும் புண்ணியவேந்தன் சிவபெருமான். அவனுக்குரிய செந்தமிழ் மந்திர ஐந்தெழுத்தின் முதலெழுத்துச் சிகரம். இது வைரவொளிபோன்று திகழ்வது. குணக்குன்றின்மேல் இட்ட விளக்கெனக் காட்டினன். இந்திரன் - வேந்தன்; சிவபெருமான்; மருத நிலக்கடவுள். (அ. சி.) கல் - பனிக்கட்டி (கல்மழை என்னும் வழக்கில் காண்க). வடதிசை - கயிலாயம். கல் - வயிரக் கல்; இந்திரன் - இந்திரியத்தை அவித்தவன்; பொறி வாயிலைந்தவித்தவன்; சிவன். கல் - வயிரம். கல் - நிலையான. (25) 919. தானே யெழுகுணந் தண்சுட ராய்நிற்குந் தானே யெழுகுணம் வேதமு மாய்நிற்குந் தானே யெழுகுண மாவதும் ஓதிடில் தானே யெழுந்த மறையவ னாமே. (ப. இ.) எழுத்துக்கள் தோன்றுவதற்குரிய பண்பமைந்த ஒலியாகிய அருட்சுடரும் சிவனே. அவ் எழுத்துக்களாலாகிய அறிவு நூலாம் மறையும் அவனே. எல்லா நற்பண்புகளுமாய் நிற்பவனும் அவனே. தானாகத் தோன்றிய உள்ளங்கவர் கள்வனும் அவனே. மறையவன் - கள்வன். (அ. சி.) தானே எழு குணம் - நாதம். (26) 920. மறையவ னாக மதித்த பிறவி மறையவ னாக மதித்திடக் காண்பர் மறையவன் அஞ்செழுத் துண்ணிற்கப் பெற்ற மறையவன் அஞ்செழுத் தாமது வாகுமே. (ப. இ.) ஆண்டவன் ஆருயிரனைத்தையும் தன்வண்ணம் ஆக்குவன். அதன்பொருட்டு மானுடப்பிறவியை மதித்து அருளினன். அவ் வுண்மையை உணர்ந்து செந்நெறி ஒழுகி மறையவனாக மதித்திடக் காண்பர். அந் நிலை எய்துவதற்குத் திருவைந்தெழுத்தின் உள்ளீடாய் நிற்பவன் சிவன். அவ் அஞ்செழுத்தோதுவார் சிவமாகி வாழ்வர். அஞ்செழுத்து - சிவயநம. (அ. சி.) மறையவன் அஞ்செழுத்தாம் - தமிழ் நான்மறைகள் எல்லாம் அஞ்செழுத்தின் பெருமையை விளக்குவவாம். (27) 921. ஆகின்ற பாதமு மந்நவாய் நின்றிடும் ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம் ஆகின்ற சீயிரு தோள்வவ்வாய்க் கண்டபின் ஆகின்ற வச்சுடர் யவ்வியல் பாமே.1
1. ஆடும். உண்மை விளக்கம், 33.
|