(அ. சி.) கமலமலருள் - உள்ளக்கமலத்திடை. பண்பழியாத பதிவழி - குணம் கெடாத சிவசக்கரத்தினால். நம எனலாம் - "நமசிவாய வாழ்க" எனலாம். (75) 969. புண்ணிய வானவர் பூமழை தூவிநின் றெண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம் நண்ணுவர் நண்ணி நமஎன்று நாமத்தைக் கண்ணென உன்னிக் கலந்துநின் றாரே. (ப. இ.) சிவ உலகத்தில் வாழும் சிவ புண்ணியப் பேறு பெற்ற வானவர்கள் அகமலர்ந்த அன்பின் அடையாளமாக முகமலர்ந்து மணங்கமழும் முழுநெறி மலர்கள் தூவி நின்று தொழுவர். சிவபெருமான் திருவடியிணைகளைச் சிவசிவ என இடையறாது வழுத்திச் சேர்வர். நமசிவய என்னும் திருவெழுத்தைக் கண்போன்று கருதிக் கணிப்பர். கணித்துக் கலந்து நின்று களிப்பர். கணித்தல் - செபித்தல். (76) 970. ஆறெழுத் தாவ தாறு சமயங்கள் ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர் சாவித் திரியில் தலையெழுத் தோன்றுள பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே. (ப. இ.) ஆறு எழுத்துக்களாலாயது ஆறு சமயங்கள் என்பர். ஒவ்வோர் எழுத்தையும் நான்கு பாகுபாடு செய்ய ஆறுக்கும் இருபத்து நான்கெழுத்தாகும். இவ் விருபத்து நான்கு எழுத்தும் காயத்திரி என்ப. காயத்திரியின் முன் சேர்த்து மொழியும் எழுத்து ஓங்காரம். அவ்வோங்காரத் தறிவதாகிய உண்மைகாண வல்லார் பிறவாப் பெரு வாழ்வு எய்துவர். சாவித்திரி: காயத்திரி. (அ. சி.) சாவித்திரி - காயத்திரி 24 எழுத்துக்கள் கொண்டது. தலை எழுத்து - பிரணவம். பேதிக்க - பிரித்தறிய. (77) 971. எட்டினில் எட்டறை யிட்டோ ரறையிலே கட்டிய ஒன்றெட்டாய்க் காண நிறையிட்டுச் சுட்டி இவற்றைப் பிரணவஞ் சூழ்ந்திட்டு மட்டும் உயிர்கட் குமாபதி யானுண்டே. (ப. இ.) 963 - இல் கூறியபடி அறையமைத்து, ஓர் அறையின்கண் எட்டு வீடமைத்து, இவ் வீடுகளைச் சூழ ஓமொழியமைத்து வழிபடின் உயிர்கள் எய்தும் முடிந்த எல்லையாகிய பெருமுதல் அங்கு வெளிப்படும். மாபதியான் - பெருமுதல். பெரும்பதியாகிய சிவவுலகத்தான் என்பதும் ஒன்று. மாபதியான்: உயிர்க்குயிராயுள்ளான் என்பதும் ஒன்று. (அ. சி.) மட்டும் - யந்திர பூசைசெய்து தியானம் செய்பவர்கட்கு மாபதியான் - சிவன். (78)
|