மறையால் நன்குணரலாம். மேலும் அப்பொய்க்கோலத்தவர் தம் புன்மையுணர்ந்து அதனையொழித்து நன்மைவழி யொழுகி நலமுறுவர். (4) 99. ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி ஞானிகள் போல நடிக்கின்ற வர்தம்மை ஞானிக ளாலே நரபதி சோதித்து ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே. (ப. இ.) திருவடியுணர்வாகிய சிவஞானமில்லாதார் சடையும், உச்சிக் குடுமியும், பூணூலும் மேற்கொண்டு மெய்யுணர்ந்தார் போல நடிப்பர். அங்ஙனம் நடிக்கும் புல்லியோரை நாடாளும் மன்னவன் ஆராய்தல் வேண்டும். அங்ஙனம் ஆராய்வது அத் துறைக்கண் திருவருளால் மேன்மையுற்ற சிவஞானிகளைக் கொண்டேயாம். அவர்கள் கட்டளையிட்டருளியவாறே புல்லியோரை வல்லவாறு தண்டித்து நல்லநெறியில் மன்னவன் நிறுத்துதல் வேண்டும். அங்ஙனஞ் செய்யின் அவர் தமக்கும் நாட்டிற்கும் அது பெருநன்மை செய்ததாகும். (அ. சி.) சடை - துறவறத்தார்களுக்கு உரியது. சிகை - நூல் இல்லறத்தார்களுக்கு உரியன. (5) 100. ஆவையும் பாவையும் மற்றற வோரையுந்1 தேவர்கள் போற்றுந் திருவேடத் தாரையுங் காவலன் காப்பவன் காவா தொழிவனேல் மேவும் மறுமைக்கு மீளா நரகமே. (ப. இ.) 'பிறந்தநாள் தொட்டுச் சிறந்ததம் தீம்பால் அறந்தரு நெஞ்சமொடு' அனைவர்க்கும் ஈயும் ஆவையும், உலகினை. வாய்மையும் தூய்மையும் மறவாது கைக்கொண்டு, செம்பொருட் சிவனே தம்பெரு முதலா வழிபாடு புரிதலும், ஐந்தெழுத்து வெண்ணீறு சிவமணி போற்றித் தொழுந் தொழுகையால் நன்னெறிப்படுத்தும் தாய்மை சிறந்த பாவையரையும், தாய்மை வழி தப்பாது நிற்கும் அறவோரையும், மண்ணுலகத்தாரே யன்றி விண்ணுலகத் தேவர்கள் போற்றும் சிவனடியார்களையும் சிறப்பாகக் காக்கும் கடமை காவலனுக்கு என்றும் உள்ளது. மேற்கூறிய மூன்றும் முறையே இன்பமும் பொருளும் அறமும் ஒருபுடையுணர்த்தும் குறிப்பாகும். அத்தகைய காவலன் காவாது ஒழிவானானால் அம் மன்னனுக்கு மீளா இருள் உலகத்துன்பம் எய்தும். திருவேடத்தார் - சிவனடியார். நரகம் - இருள் உலகம். (6) 101. திறந்தரு முத்தியுஞ் செல்வமும் வேண்டின் மறந்தும் அறநெறி யேஆற்றல் வேண்டும் சிறந்தநீர் ஞாலஞ் செய்தொழில் யாவையும் அறைந்திடில் வேந்தனுக் காறிலொன் றாமே.
1. ஆபயன். திருக்குறள், 560.
|