(அ. சி.) சொல்ல - பிறர்க்கு எடுத்துரைக்க. பொருள் - இன்பப் பொருள். புவனாபதியார் - பிரமன் முதலிய பதவியாளர்கள். மருளுற்ற சிந்தை - புவனாதிபதிகளைப் பரம்பொருள் எனக் கருதும் மயக்க உணர்வு. அருமைப்பொருள் - முத்திச் செல்வத்தை நல்கும். (27) 1048 .ஆன வராக முகத்தி பதத்தினள் ஈன வராகம் இடிக்கும் முசலத்தோ டேனை யுழுபடை ஏந்திய வெண்ணகை ஊன மறவுணர்ந் தாருளத் தோங்குமே. (ப. இ.) இயற்கை உழுபடை போன்ற வெண்பன்றிமுகத்தினள். அதற்கொத்த திருவடியினள். நன்னெறிச் செல்லாது புன்னெறிச் செல்லும் புரையோரை நன்னெறிப்படுத்தும் பொருட்டு அவர்தம் உடம்பினை இடித்து ஒறுக்கும் இருப்புலக்கையினையுடையவள். நன்மைக்கு அடையாளமாகிய உழுபடையாகிய ஏரினைக் கைக்கொண்டவள். பால் நிலவுபோலும் வெள்ளிய நகையினையுடையவள். திருவடியுணர்வு கைவந்த செந்நெறிச் செல்வர்கள் உள்ளத்துப் பிறப்புக்கு வித்தாம் மலப்பசை வந்து பொருந்தாது நீங்க வீற்றிருந்து உணர்வொளியாக ஓங்குவள். ஈனவர் - புன்னெறிச் செல்வோர். முசலம் - இருப்புலக்கை. புரையோர் - கீழோர். ஊனம் - மலப்பசை. ஆன....தி: நன்னெறியாளர் உள்ளத்து விரும்பியிருப்பவள் என்றலும் ஒன்று. (அ. சி.) வராகமுகத்தி - வராகி. ஈனவர் - இழிகுணம் உடையோர். முசலம் - இருப்புலக்கை. (28) 1049 .ஓங்காரி என்பா ளவளொரு பெண்பிள்ளை நீங்காத பச்சை நிறத்தை யுடையவள் ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு இரீங்காரத் துள்ளே யினிதிருந் தாளே. (ப. இ.) ஓமொழிக்கு உரியளாகிய ஒப்பில்லாத பெண்பிள்ளை. என்றும் நீங்காத மரகதமாகிய பச்சை நிறத்தினையுடையவள். எழுச்சியுடையவளாய் அருளோன், ஆண்டான், அரன், அரி, அயன் என்னும் ஐவர் நிலைகளையும் படைத்து ஐவரையும் தொழிற்படுத்தும் ஆற்றலள், இரீங்காரத்துள்ளே இனிதிருந்தனள் என்க. இரீங்காரம் மாயையின் வித்தெழுத்தென்ப. தேனுண்டு மயங்கி வீழும் வண்டொலியை ஒத்திருப்பதுங் காண்க. ஆங்காரி - எழுச்சியுடையவள். (அ. சி.) ஐவர் - சதாசிவன், மகேசன், உருத்திரன், மால், பிரமன். ரீங்காரம் - ரீம் என்பது மாயையின் பீச எழுத்து. (29) 1050 .தானே தலைவி யெனநின்ற தற்பரை தானே யுயிர்வித்துத் தந்த பதினாலும் வானோர் தலமும் மனமும்நற் புத்தியுந் தானே சிவகதி தன்மையு மாமே. (ப. இ.) தானே தலைவியென வெளிப்பட்டு உலகியலில் நின்றருளும் திருவருள் தற்பரை யாவள். இவள், நமசிவய என்பதன்கண்
|