1136 .பேச்சற்ற நற்பொருள் காணும் பெருந்தகை மாச்சற்ற சோதி மனோன்மனி மங்கையாங் காச்சற்ற சோதி கடவு ளுடன்புணர்ந் தாச்சற்றென் உட்புகுந் தாலிக்குந் தானே. (ப. இ.) சிவன் 'மாற்றம் மனம்கழிய நின்ற மறையோ' னாதலின் பேச்சற்ற இடத்தில் உணரும் நற்பொருளாவன். அப் பெருந்தகை இயல்பாகவே மாசகன்ற பேரறிவுப் பேரொளி. மனோன்மனி மங்கையாகிய பகையற்ற பேராற்றல் பேரொளி அச் சிவனை மணந்தனள். அவள் எளியேனுட்புகுந்து தானே களிப்பிக்கச் செய்வாளாயினள். மாசு: மாச்செனத்திரிபாயிற்று. ஆலித்தல் - களித்தல். (அ. சி.) மாச்சற்ற - மாசு அற்ற. காச்சற்ற - பகைமை அற்ற. (6) 1137 .ஆலிக்குங் கன்னி அரிவை மனோன்மனி பாலித் துலகிற் பரந்துபெண் ணாகும் வேலைத் தலைவியை வேத முதல்வியை ஆலித் தொருவன் உகந்துநின் றானே.1 (ப. இ.) ஆருயிர்களின் அன்பிற் கீடாகக் களிப்பிக்கச் செய்யும் கன்னி அரிய மனோன்மனி. அவள் உலகிற் பெரும்பயன் அருளி நீக்கமற நிறைந்துநிற்கும் பெண்ணாவள். அவளே ஐந்தொழில் புரியும் அருட்டலைவி. அவளே மறை முதல்வி அவளை இடப்பால் பெற்று ஒப்பில்லாத சிவன் உயர்ந்து நின்றனன். உகப்பு - உயர்வு. (அ. சி.) வேலைத் தலைவி - ஐந்து தொழில்களுக்கும் முதல்வி. (7) 1138 .உகந்துநின் றான்நம்பி ஒண்ணுதற் கண்ணோடு உகந்துநின் றான்நம் முழைபுக நோக்கி உகந்துநின் றான்இவ் உலகங்கள் எல்லாம் உகந்துநின் றான்அவள் தன்றோள் தொகுத்தே. (ப. இ.) நம்பியாகிய சிவன் அழகிய நெற்றிக்கண்ணுடன் உயர்ந்து நின்றனன். அவன் ஆருயிர்கள் தன் திருவடியில் புகவேண்டும் என்னும் அருள் நோக்கத்தால் அவ்வுயிர்களிடத்தும் முதன்மை பெற்றிருந்தனன். அனைத்துலகங்களுக்கும் அவனே தலைவனாய் நின்றனன். இவையனைத்தும் திருவருளம்மையின் திருத்தோள் புணர்ந்தமையால் வந்தன. அதனால் அம்மையை அணைந்து உயர்ந்து நின்றான் எனபர். 'உகப்பே உயர்தல் உவப்பே உவகை.' தொல். சொல் - 305. (அ. சி.) அவள் தன் தோள் தொகுத்து - புணர்ந்து. (8)
1. பெண்ணிற். திருக்குறள், 54. " கற்றார். அப்பர் 4. 104 - 2. " தென்பால் - 8. திருச்சாழல், 6. " உடுத்துந், குறுந்தொகை, 295.
|