46
 

9. அறஞ்செய்வான் திறம்

107. ஆர்க்கும் இடுமின்1 அவரிவர் என்னன்மின்
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணுங்2 காலம் அறிமினே.

(ப. இ.) கேளிர், கேளல் கேளிர், கேளலார், நாடு மொழி நன்னெறி, உயர்வு, தாழ்வு, வறுமை, செல்வம், இளமை, முதுமை முதலிய எவ்வகை வேறுபாடுமின்றி உடலினுக்கு உணவும் உயிரினுக்கு உணர்வும் வேண்டினார்க்கு ஈதல் உடையோர் கடனாகும். ஈண்டு உணவினை ஒதுகின்றனர். தக்காராய் வந்தார் யாவர்கட்கும் மிக்கவுவகையோடு இலனென்னும் எவ்வம் உரையாவகையாய்க் குறிப்பறிந்து இடுங்கள். அவர் இவர் என்று எவ்வகை வேறுபாடும் கூறாதீர்கள். செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருந்து உண்ணுங்கள். உண்ணத்தக்க காய்கனி கிழங்கு விதை இலை பூ முதலியவற்றை அவ்வாறே கொண்டும், ஏனையவற்றைத் தக்கவாறு சமைத்தும் உண்ணுதல் வேண்டும். அவ்வாறு உண்ணுங்கால், சிறுபொழுதும் நாள்களும் கழியவிட்டு அவை பழைமையாகி செவ்வியழிந்த பின் உண்ணுதல் தவறு. அதனால் பழம்பொருள் போற்றன்மின் என்றனர். தமிழகத்தாருண்ணும் பழஞ்சோறு கறி முதலியன இவ்வகையைச் சார்ந்தனவல்ல. அவை முறையே கழுநீர் வடிகஞ்சி வெந்நீர் சுக்கு கருவேப்பிலை முதலியன கூட்டிப் பதஞ்செய்து புதுப்பித்தலும் கறிவகைகள் பலவற்றையும் பொருந்துமாறு கூட்டி மீண்டும் அடுப்பேற்றி மருந்தென அமைத்தலும் செய்தலின், அவை உண்ணத்தக்க புதுப் பொருளே யன்றிப் பழம்பொருள்கள் அல்ல. காரணம் பற்றியோ கிட்டாமையாலோ சில பகல் கழிந்து உண்ண நேரின் மிக்க வேட்கையுண்டாவதியல்பு. அங்ஙனம் நேரினும் படபடப்பாய்க் கழிவிரைவாய் உண்ணுதல் ஆகாது. ஆர அமர இருந்து நன்றாய் மென்று உடலொடு சார்ந்து திடம் பெறுமாறு உண்க. 'நுறுங்கத் தின்றார்க்கு அகவை நூறென்ப' என்பது பழமொழி. காக்கையானது வீட்டிலுள்ள பொருள்களைக் கவர்ந்து கள்ளமாய் உண்ணும்போது ஒரு சிறிதும் கரைவதில்லை. வீட்டிலுள்ளார் காக்கையைக் கூவியழைத்து அதற்கென வைத்த உணவினைக் கரையாது உண்பதும் இல்லை. இவ்விரு வேறு காலத்தன்மையான் ஏற்படும் நன்மை புன்மைகளை யறிந்து புன்மையை அகற்றி நன்மைக்கண் உறைத்து நின்று ஒழுகுதல் வேண்டும். இஃது ஒட்டணி. இதனால் பெறப்படுவது: ஆருயிர் அனைத்தும் சிவபெருமானுக்கு அடிமை. ஏனை உலகமும் உலகியற் பொருள்களும் அவன் உடைமை. அவன் திருவருள் ஒவ்வொருவரையும் பிறர்க்கு உதவி முதற்கண் அவர்களையுயர்த்தி அதன் வாயிலாகத் தாமும் உயருமாறு அறிவால், ஆற்றலால், ஆக்கத்தால், ஆண்மையால், ஊக்கத்தால், நோக்கத்தால், சீலத்தால், கோலத்தால், காலத்தால் உயர்த்துவிக்கின்றது. இவ்வுண்மை யுணர்ந்தோர் தம்பாலுள்ளவை ஆண்டவன் அருளென்னும் மறவாத்தெருளுடன் தம்மிலிருந்து தமது பாத்து ஏனையவற்றை ஈத்துவந்து உண்பர். ஏனையார்

1. புண்ணிய. 11. பட்டினத் திருவிடை மும்மணி 19.2. காக்கை. திருக்குறள், 527.