(ப. இ.) மேற்கூறிய வழிபாட்டு முறையில்லாதார் இருவினையின் பயனை எய்தி இளைப்பர். மாந்தளிர்போலும் திருமேனியும், குமரிப் பருவமும், என்றும் நீங்கா இளமையும், அருள்பொழியும் கண்ணும், உடைய திருவருளம்மையை இனிய செந்தமிழ்மொழியொடு வஞ்சனை முதலியன இன்றி வழிபடுக. இஃது அருளம்மையைக் கருத்தில் எழுந்தருளப் பண்ணும் வகையாகும். வாறு - வகை; விதம். மாரி, துர்க்கை எனப் பாடம்கொள்வாரும் உளர். (அ. சி.) கைதவம் - வஞ்சம் - பொய் - துன்பம். (50) 1181. கருத்துறுங் காலங் கருது மனமுந் திருத்தி யிருந்தவை சேரு நிலத்து ஒருத்தியை உன்னி உணர்ந்திடு மண்மேல் இருத்திடும் எண்குணம் எய்தலும் ஆமே.1 (ப. இ.) வழிபடும் காலமுறைமையினைக் கருதுக. திருவருளம்மையின் திருவடியிணையைச் செவ்விய நெஞ்சில் நினைக. வழிபாட்டுக்குரிய இடத்தை நாடுங்கள். ஒப்பில்லாத அவ் அம்மையை உள்ளுற நினைந்து போற்றுங்கள். போற்றவே சிவபெருமானின் எட்டுக் குணங்களும் அவளருளால் உங்களை அதர்வினாய் வந்து எளிதாக இனிதாக எய்தும். (அ. சி.) எண்குணம் - தன் வயத்தனாதல் முதலிய எண்குணங்கள். (51) 1182. ஆமையொன் றேறி அகம்படி யானென ஓமஎன் றோதியெம் உள்ளொளி யாய்நிற்கும் தாம நறுங்குழல் தையலைக் கண்டபின் சோம நறுமலர் சூடிநின் றாளே.2 (ப. இ.) ஆமையைப் போன்று மெய் முதலிய அறிகருவிகளைத் திருவருள் துணையால் தீயவழியிற்போக ஒட்டாமல் தடுத்து நல்லவழியில் செலுத்துங்கள். இதுவே புலனடக்கம். யான் திருவருளுக்கு அடிமை என உறுதியாக எண்ணுக. ஓம் என்னும் தமிழ்மறையினை ஓதுக. அப்பொழுது அம்மை உள் ஒளியாக நின்றருள்வள். அத்தகைய பூச்சூடிய நறுமணங்கமழும் கூந்தலையுடைய அம்மையைக் கண்டபின் திங்கள் சூடி நின்ற அறிவருள் நிலை தோன்றும். ஓம் என்பது ஓம எனத் திரிந்து நின்றது. (அ. சி.) ஆமையொன்றேறி - ஐம்புலன் அடக்கி. ஓம் அ - பிரணவம். (52) 1183. சூடிடும் அங்குச பாசத் தொளைவழி கூடும் இருவளைக் கோலக்கைக் குண்டிகை நாடும் இருபத நன்னெடு ருத்திரம் ஆடிடுஞ் சீர்புனை ஆடக மாமே.
1. கோளில். திருக்குறள், 8. " எட்டு. அப்பர், 5. 89 - 8. " காலையே. 11. காரைக்காலம்மை, அற்புதம் - 65. 2. ஒருமையுள். திருக்குறள், 126.
|