(ப. இ.) தோட்டியும் கயிறும் தொளைவழியாகப் போடப்படும் வளையல்களும், நீர்க்கரகமும், நல்லார் நாடும் இரண்டு திருவடியும் அரன் நாமமாகிய ஐந்தெழுத்தோதும் திருவாயும்கொண்டு பொன்மன்றில் திருவருளம்மை ஆடிடும் என்ப. உருத்திரம்: ஈண்டுத் திருவைந்தெழுத்து. (அ. சி.) உருத்திரம் - உருத்திர மந்திரம். (53) 1184. ஆமயன் மாலரன் ஈசன் சதாசிவன் தாமடி சூடிநின் றெய்தினர் தம்பதங் காமனுஞ் சாமன் இரவி கனலுடன் சோமனும் வந்தடி சூடநின் றாளே.1 (ப. இ.) திருவருள் அம்மையின் திருவடியைச் சூடி அயன், அரி, அரன், ஈசன், சதாசிவன் என்னும் தூமாயையிலிருக்கும் ஐவரும் தங்கள் தங்கள் நிலையை எய்தினர். (இவர்கள் ஆருயிர் இனத்தில் தவப்பேறுடையார்; இவர்களை அணுபக்கத்தாரென்ப.) இதுபோல் காமனும் அவன் தம்பி சாமனும், பகலவனும், தீக்கடவுளும், திங்களும் அம்மையின் அருள்பெற்றுத் தங்கள் தங்கள் நிலையினை எய்தினர். (இவர்கள் மூலப் பகுதியின்கணுள்ளவர்கள்.) சாமனைப் புதன் என்பாருமுளர். (அ. சி.) சாமன் - புதன;் காமன் - தம்பி. (54) 1185. சூடும் இளம்பிறை சூலி கபாலினி நீடும் இளங்கொடி நின்மலி நேரிழை நாடி நடுவிடை ஞான முருவநின் றாடு மதன்வழி அண்ட முதல்வியே. (ப. இ.) முழுமுதல்வியாகிய அம்மை, இளம்பிறைசூடியவள். சூலத்தைக் கைக்கொண்டவள். கபாலமாகிய மண்டை ஓட்டினை ஏந்தியவள். என்றும் ஒருபடித்தாம் இளங்கொடி; இயல்பாகவே மலமிலாதவள். சிறந்த அணிகலன் அணிந்தவள். நடுநாடியாகவுள்ளவள். ஆனேற்றை ஊர்பவள். மெய்யுணர்வே திருமேனியாகவுடையவள். அவள் ஆட்டத்தின்வழி அண்டம் அனைத்தும் நின்றாடும் என்க. (55) 1186. அண்ட முதலாய் அவனி பரியந்தங் கண்டதொன் றில்லை கனங்குழை யல்லது கண்டனுங் கண்டியு மாகிய காரணங் குண்டிகை கோளிகை கண்டத னாலே.2 (ப. இ.) அண்டமுதலாக உலகம் ஈறாகச் சொல்லப்பட்ட அனைத்தும் அம்மையின் கலப்பின்றி இயங்குவதில்லை. அது வண்டிக்காரன் இல்லாமல் வண்டியியங்குவதில்லை என்பதை யொக்கும். பிழைபொறுக்கும் பெற்றியின் அடையாளமாகிய கண்டனும் கண்டியும் ஆண் பெண் போல் இருவேறு வகைத் தோற்றம் அளிப்பது காரியவுலக உருவால்
1. மாமனும். சீவகசிந்தாமணி, 43. 2. சத்தியும். சிவஞானசித்தியார், 1. 3 - 10.
|