473
 

வேறுபாடு காணப்பெறும் உயிர்களின் உடம்பைப் பொறுத்தேயாம். இதுஇயற்கையாகிய மரம், நிலை கதவு எனச் செயற்கையான் இருவேறு வகைப்பட்டு இயைந்து பயனெய்துவதையொக்கும். இதுவல்லாமல் உயிரிலேனும் உயிர்க்குயிராகிய இறையிலேனும் ஆண்பெண் வேறுபாடு இல்லை. இவ் வுண்மை 'காவலும் காதலும் கண்டியைந்தின்புற, மேவும் ஆண் பெண்ணிரண்டாம் மெய்' என்பதனாலும் விளங்கும். குண்டிகை கோளிகை என்னும் ஆண்பெண் வேறுபாடுகள் நோக்குக.

(அ. சி.) கண்ட ...னாலே - ஆண்பெண் என்னும் விதமாக உலகத்தைப் படைப்பதற்குச் சத்தியும் இரு விதமாய் நின்றாள்.

(56)

1187. ஆலமுண் டானமு தாங்கவர் தம்பதஞ்
சாலவந் தெய்துந் தவத்தின்பந் தான்வரும்
கோலிவந் தெய்துங் குவிந்த பதவையோ
டேலவந் தீண்டி இருந்தனள் மேலே.

(ப. இ.) நாடிகள் ஒருங்கு கூடிவந்து பொருந்தும் நடுநாடியுடன் அமைய வந்துசேர்ந்து உச்சித்தொளைமேல் திருவருள் அம்மை தங்கியிருக்கின்றனள். அவள் திருவருளால் ஆலமுண்டான் பதமாகிய சிவவுலகம் மிகவும் எய்தும். அமுதுண்டவானவர் நிலையினை விரும்பின் அதுவும் எய்தும். நானெறி நற்றவத்தின்பமும் கைகூடும். குவிந்த பதவை: சிறுவழி; நடுநாடியாகிய சுழுமுனையாகும்.

(அ. சி.) குவிந்த பதவை - சிறு வழி. மேல் - கபாலத்தில்.

(57)

1188. மேலாம் அருந்தவம் மேன்மேலும் வந்தெய்தக்
காலால் வருந்திக் கழிவர் கணத்திடை
நாலா நளினநின் றேத்திநட் டுச்சிதன்
மேலா மெழுத்தின ளாமத்தி னாளே.

(ப. இ.) உயர்ந்த பெருந்தவம் வந்து கைகூடவேண்டிக் காடும் மலையும், நாடும் நகரமும், யாறும் கடலும், குளமும் கூவலும், குகையும் திகையும் கால்நோவ நடந்து வீணாக் கழிவர். அவ்வாறன்றிக் கண்ணிமைப்பொழுதினுள் அருந்தவம் கைகூடும்வழி வருமாறு: இரைக் குடராகிய ஆமத்தின்கண் திருவருளம்மை தங்கியுள்ளாள். அவளை மூலமாகிய நாலிதழ்த் தாமரையின்கண் நாடி வழிபட்டு உச்சிக்குமேல் உடன்கூடி உறைத்துநின்று, ஓமொழியை உன்னுதலே முறையாம்.

(அ. சி.) காலால் வருந்தி - நடந்து அலைந்து. நாலாம் நளினம் - நாலிதழ்த் தாமரை. ஆமம் - ஆமாசயம்.

(58)

1189. ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினள்
ஓமத்தி லேயும் ஒருத்தி பொருந்தினள்
நாம நமசிவ என்றிருப் பார்க்கு
நேமத் துணைவி நிலாவிநின் றாளே.1


1. அஞ்செழுத். சிவஞானபோதம், 6. 3 - 1.