1196. ஆயிழை யாளொடு மாதிப் பரமிடம் ஆயதொ ரண்டவை யாறும் இரண்டுள ஆய மனந்தொ றறுமுக மவைதனில் ஏயவார் குழலி இனிதுநின் றாளே. (ப. இ.) திருவருள் அம்மையுடன் ஆதியாகிய சிவன் இடமாயிருப்பது சக்கரமாகும். சக்கரம் - யந்திரம்; அண்டவை. அச் சக்கரம் எட்டு இதழ்களையுடையதாயிருக்கும். அவ்வெட்டிதழ்களுள் மனத்திற்கு வாய்த்த ஆறு இதழ்களில் மணங்கமழ்கின்ற கூந்தலையுடைய அம்மை இனிது வீற்றிருக்கின்றனள். முகம் - இதழ். (அ. சி.) அண்டவை - சக்கரம். ஆறும் இரண்டுள - எட்டிதழ். (66) 1197. நின்றனள் நேரிழை யோடுடன் நேர்பட இன்றெ னகம்படி ஏழும் உயிர்ப்பெய்துந் துன்றிய வோரொன் பதின்மருஞ் சூழலுள் ஒன்றுயர் வோதி யுணர்ந்துநின் றாளே. (ப. இ.) நேரிழையாகிய திருவருளம்மை அகத்தே நேர்பட நின்றனள். அதனால், பத்துக்காற்றாகிய உயிர்ப்பினுள் உயிர்க்காற்று, மலக்காற்று, வீங்கற்காற்று மூன்றும் ஒழித்து ஒழிந்த தொழிற்காற்று ஒலிக்காற்று, நிரவுகாற்று, தும்மற்காற்று, விழிக்காற்று, கொட்டாவிக் காற்று, இமைக்காற்று ஆகிய ஏழும் இயங்கும். அம்மையுடன் நெருங்கிய ஒன்பது ஆற்றல்களும் சூழ்ந்து விளங்கும். உயர்வற உயர்ந்த ஒன்றாகிய சிவபெருமானை ஆருயிர்கட்கு உணாத்த ஓதிநின்றனள். அருளம்மை ஓதிநின்றது தமிழ்மறையும் முறையுமாகும். மறை - வேதம். முறை - ஆகமம். (அ. சி.) உயிர்ப்பெய்தும் - உணர்ச்சியுறும். ஒன்பதின்மர் - ஒன்பது சத்திகள். ஒன்று - சிவம். (67) 1198. உணர்ந்தெழு மந்திரம் ஓமெனும் உள்ளே மணந்தெழு மாங்கதி யாகிய தாகுங் குணர்ந்தெழு சூதனுஞ் சூதியுங் கூடிக் கணந்தெழுங் காணுமக் காமுகை யாமே. (ப. இ.) அகத்தே உணர்ந்தெழு மந்திரம் ஓம் என்று சொல்லுப. அம் மந்திரத்தினுள்ளே பொருள் விளக்கமாகத் தோன்றும். ஆகும் நிலையும் கைகூடும். மேன்மைப் பண்புகள் அனைத்தும் இயல்பாகவே அமைந்துள்ள மறைபொருளாகிய சிவனும் சிவையும் பிரிவறக்கூடி ஆருயிர்களுடன் கலந்தெழுவர். இவ்வாறு எழும்படி காண்பது உயிர்கள் மாட்டு மிக்க விருப்பமுள்ள அம்மையினால் ஆகும். காமுகை - விருப்பமுள்ளவள். (அ. சி.) மணந்தெழும் - பொருந்தி எழும். சூதனும் சூதியும் - சிவமும் சத்தியும் கணந்து - கலந்து. (68)
|