477
 

1199. ஆமது வங்கியும் ஆதியும் ஈசனும்
மாமது மண்டல மாருத மாதியும்
ஏமது சீவன் சிகையங் கிருண்டிடக்
கோமலர்க் கோதையுங் கோதண்ட மாகுமே.

(ப. இ.) ஒளிக்கும் ஒளியருளும் பேரொளிப்பிழம்பாகிய சுடரும், நடப்பாற்றலாகிய ஆதியும், அவ் வாதியை உடலாகவுடைய ஆண்டானும், திங்கள்மண்டலமும், காற்றுமுதலாயதும், காவலாகிய உயிரெழுத்தும், உயிரெழுத்துக்கு ஒலிதரும் சிகையாகிய நாதமும், நடுநாடியாகிய கோதண்டமும் இருண்ட கூந்தலின்கண் சிறந்த மலர் சூடிய திருவருளம்மையான் இயங்கும்.

(அ. சி.) சீவன் சிகை - உயிர் அக்கரம். கோதண்டம் - சுழுமுனை.

(69)

1200. ஆகிய கோதண்டத் தாகு மனோன்மனி
ஆகிய ஐம்ப துடனே அடங்கிடும்
ஆகும் பராபரை யோடப் பரையவள்
ஆகு மவள்ஐங் கருமத்தள் தானே.

(ப. இ.) நாடுநாடியின்கண் விளக்கமுறும் மனோன்மனியானவள் ஐம்பத்தொரேழுத்துக்களுள் அடங்குவள். அவளே பேரறிவுப் பேராற்றலுடன் பெரும்பொருளாவள். அவள் படைத்தல் முதலிய ஐந்தொழிலுக்கும் உரியவளாவள். பராபரை - பேரறிவுப் பேராற்றல். பரை - பெரும்பொருள்.

(அ. சி.) ஆகிய ஐம்பத்து உடன்-51 அக்கரங்களுடன்.

(70)

1201. தானிகழ் மோகினி சார்வான யோகினி
போன மயமுடை யாரடி போற்றுவர்
ஆனவ ராவியி னாகிய வச்சிவந்
தானாம் பரசிவ மேலது தானே.

(ப. இ.) திருவருள் ஆருயிர்களின் அன்பை இயக்கும் மோகினி. அவளே சார்ந்த யோகினியாகிய காளி. (காளியின் ஏவல்செய்பவளும் யோகினி எனப்படுவள்.) பிறப்பறமுயலும் பெரியோர் அம்மையின் திருவடியைப் போற்றுவர். எழுவகைப் பிறப்பினுள் மேலான மக்கள் பிறப்புயிரின்கண் மிக்குவிளங்குவது சிவம். அச் சிவம் தானாக விளங்குவது பரசிவம். அதற்கும் மேலாக விளங்குவது திருவருளம்மையாகும்.

(அ. சி.) போன மயம் உடையார் - பிறப்பற்றவர். ஆவியினாகிய - உயிர்தொறும் நிறைந்த.

(71)

1202. தானந்த மேலே தருஞ்சிகை தன்னுடன்
ஆனந்த மோகினி யம்பொற் றிருவொடு
மோனையில் வைத்து மொழிதரு கூறது
வானவை யோமெனும் அவ்வுயிர் மார்க்கமே.