482
 

1216. நெறியது வாய்நின்ற நேரிழை யாளைப்
பிறிவது செய்யாது பிஞ்ஞக னோடுங்1
குறியது கூடிக் குறிக்கொண்டு நோக்கும்
அறிவொடும் ஆங்கே அடங்கிட லாமே.

(ப. இ.) திருநெறியாகிநின்ற திருவருளம்மையைப் பின்னல் திருச் சடையினையுடைய பிஞ்ஞகனோடும் பொருளால் பிரித்துப் பேசாது அம்மையின் குறிப்பின்வழிக்கூடி வேறோர் குறிப்பின்றி அதுவே குறிப்பாகக் குறிக்கொண்டு நோக்குவார் நல்லாராவர். அவர்தம் அறிவு திருவருளறிவுடன் அடங்கி அருளறிவாகவேநிற்கும். அடங்கலென்பது ஆருயிர் தஞ்செயலற்று அருட்செயலாகவே இயங்குதல். அன்னை அஞ்ஞை என்றாவதுபோல் பின்னலன் பிஞ்ஞகன் என்றாயிற்று. நல்லார் - மெய் கண்டார்; சிவஞானி; திருவடியுணர்வுகை வந்தார்.

(அ. சி.) சத்தியையும் சிவனையும் பிரித்தல் கூடாது என்றது இப்பாட்டு.

(86)

1217. ஆமயன் மாலரன் ஈசன்மா லாங்கதி
ஓமய மாகிய ஒன்பதும் ஒன்றிடத்
தேமய னாளுந் தெனாதென என்றிடும்
மாமய மானது வந்தெய்த லாமே.

(ப. இ.) திருவருள் ஆணைபெற்றுத் தொழில்புரியும் அயன், அரி (மால்), அரன், ஆண்டான் என்னும் ஆருயிர் இனமாம் இவர்கள் விரும்பும் நிலையினை. அருளவும் மிகவும் சிறப்புத் தன்மை பொருந்திய ஒன்பது ஆற்றல்களும் ஒன்றுகூடவும், தீரா இன்பவடிவினனாகிய சிவபெருமான் திருநோக்கம் கொண்டனன். கொள்ளவே தென்னாதெனா எனத் தேனுண்ணவந்து மொய்க்கும் ஆருயிர் வண்டினங்களின் நிலைக்களமாகிய ஒலிமெய் வடிவமெய்திற்று என்பர். மால் - விருப்பம். எனவே தூயமாயையின்கண் அயன்மால் முதலானோர் விரும்பும் நிலைவந்து கைகூடும். இங்குக் கூறிய அயன் மால் அரன் ஆகிய மூவரும் ஆசான் மெய் (சுத்தவித்தை) யின்கண் உறைவோர்.

(அ. சி.) தேமயம் - இன்ப வடிவம்.

(87)

1218. வந்தடி போற்றுவர் வானவர் தானவர்
இந்து முதலாக எண்டிசை யோர்களுங்
கொந்தணி யுங்குழ லாளொடு கோனையும்
வந்தனை செய்யும் வழிநவில் வீரே.2

(ப. இ.) பூங்கொத்தணிந்த கூந்தலையுடைய திருவருளம்மையுடன் கோனாகிய சிவபெருமானையும் இன்பநாட்டமே மிக்குடைய வானவர்களும் பொருள்நோக்கமே மிக்குடைய தானவர்களும் திங்கள் முதலாகச்


1. அருளது. சிவஞானசித்தியார், 5.2-9.

2. ஞாயிறாய். அப்பர், 4.32-6.

" வாழ்த்துவதும். 8. திருச்சதகம், 16.