498
 

10. வயிரவச் சக்கரம்

1267. அறிந்த பிரதமையோ டாறு மறிஞ்சு
அறிந்தவச் சத்தமி மேலிவை குற்றம்
அறிந்தவை யொன்றுவிட் டொன்றுபத் தாக
அறிந்து வலமது வாக நடவே.

(ப. இ.) வளர்பிறை ஒன்று முதல் ஆறுவரை ஆறாதாரங்களிலும் காணப்படும் திதிகள் என்க. இதனை அறிந்து மேலே ஏழாம் பிறை முதல் பொருந்தும் பிறைகளை ஒன்றுவிட்டு ஒன்றாக எண்ணுங்கால் ஏழை விட்டு எட்டும், ஒன்பதைவிட்டுப் பத்தும், பதினொன்றை விட்டுப் பன்னிரண்டும், பதின்மூன்றைவிட்டுப் பதினான்கும் ஆகிய நான்கும் முன்னுள்ள ஆறும் கூட்டப் பத்தாகும். இப் பத்தும் பகையை வெல்வார் புறப்பட்டுச் செல்லும் புலத்தைத் தம் வலப்பால் அமையும்படி செல்வாராக ஏழை விட்டு எட்டு என்பது: சத்தமியைவிட்டு அட்டமி எனவும் அதுபோல் மற்றவற்றையும் கொள்க.

(அ. சி.) ஆறும் - ஆறு ஆதாரங்களினும். வலமதுவாக-வலப்பக்கம் வளர்பிறையாக

(1)

1268. நடந்து வயிரவன் சூல கபாலி
கடந்த பகைவனைக் கண்ணது போக்கித்
தொடர்ந்த வுயிரது வுண்ணும் பொழுது
படர்ந்த வுடல்கொடு பந்தாட லாமே.

(ப. இ.) மேற்கூறிய முறைப்படி நடந்து வயிரவக் கடவுளினது துணையை வேண்டி அவர் சூலத்தை யுடையவரென்றும், கபாலத்தை யுடையவரென்றும் மனங்கொண்டு பகைமேற் செல்லுதல் வேண்டும். அங்ஙனம் செல்வார் பகை வென்று பகைவன் கருத்தையும் கண்ணையும் போக்கி அவன்தன் உயிரினைத் தொட்டுண்ணும் போழ்து மிக எளிதாக அவன்தன் உடலைப் பந்தாடலொத்துப் பந்தாடலாகும்.

(அ. சி.) சூலகபாலி - சூலத்தையும் கபாலத்தையும் . கடந்து - வென்று

(2)

1269. ஆமேவப் பூண்டரு ளாதி வயிரவன்
ஆமே கபாலமுஞ் சூலமுங் கைக்கொண்டங்
காமே தமருக பாசமுங் கையது
வாமே சிரத்தொடு வாளது கையே.

(ப. இ.) ஆருயிர்கள் விரும்புமாறு திருவருள் புரியும் வயிரவக் கடவுளின் திருவுருவில் காணப்படும் படைகள் முதலியன வருமாறு : மண்டையோடு, சூலம் உடுககை, கயிறு, தலை, வாள் என்ப.

(அ. சி.) ஆ மேவ-உயிர்கள் விரும்ப தமருகம் - உடுக்கை. இதில் வயிரவருடைய ஆறு ஆயுதங்கள் கூறப்பட்டுள்ளன

(3)