514
 

1316. தானே கழறித் தணியவும் வல்லனாய்த்
தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்த்
தானே தனிநடங் கண்டவள் தன்னையுந்
தானே வணங்கித் தலைவனு மாமே.

(ப. இ.) அம்மை வழிபாட்டினன் திருவருள் வலத்தால் பேரவைக் கண் தானே எவர்க்கும் மிக்கானாய் விளங்குவன். அதனால் தானே பேசி அமையவும் வல்லனாவன். தானே பிறர் நினைத்தவற்றை எளிதாக வுணர்ந்து ஐயுறவின்றித் துணிந்து கூறவும் வல்லனாவன். பேரூழிக் காலத்துப் பெரும் பொருளாம் சிவபெருமான் புரியும் தனிப்பெரும் திருக்கூத்தைக் காணவும் வல்லனாவன். அப் பெருமானைவிட்டுப் பிரியா ஆணையாம் திருவருளைக் காணவும் வல்லனாவன். அத் திருவருளை வணங்கி அம் முதல்வி துணையால் சிவனடியிற் கூடிச் சிவமே யாகத் திகழவும் வல்லனாவன்.

(அ. சி.) தானே....வல்லனாய் - அவையிற் பேசும் ஆற்றல் வாய்ந்தவனாய். தனி நடம் - பெரு ஊழிக் காலத்தில் சத்தியும் சிவனும் தனித்து இருக்கும்போது சிவன் செய்யும் நடனம்.

(23)

1317. ஆமே யனைத்துயி ராகிய அம்மையுந்
தாமே சகலமும் ஈன்றஅத் தையலும்
ஆமே யவளடி போற்றி வணங்கிடிற்
போமே வினைகளும் புண்ணிய னாகுமே.1

(ப. இ.) அனைத்துயிரையும் உடலுடன் சேர்த்தலாகிய படைப்பினையருளி அவ் வுயிர்களுடன் கலப்பால் ஒன்றாயிருத்தலின் அனைத்துயிரும் ஆகிய அம்மை என்பர். அவ் வுயிர்களுக்கு வேண்டும் உறையுள் உழைப்பு உணா உறவு முதலிய உதவிகளை ஈன்றவளும் அவ் அம்மையே. அவள் திருவடியைப் போற்றிடில் இருள்சேர் இருவினையும் அகலும். பொருள் சேர் புண்ணியமும் பெருகும். புண்ணியம் - இறைபணி.

(24)

1318. புண்ணிய னாகிப் பொருந்தி உலகெங்கும்
கண்ணிய னாகிக் கலந்தங் கிருந்திடுந்
தண்ணிய னாகித் தரணி முழுதுக்கும்
அண்ணிய னாகி அமர்ந்திருந் தானே.2

(ப. இ.) சிவபெருமான் உலகெங்கணும் புண்ணியனாகிப் பொருந்தினன். கருதி மதிக்கத்தக்க சிறப்புடையனாகி நிலைபெற்ற ஆருயிர் அனைத்தினும் கலந்துநின்றனன். திருவருட் கூறுடையனாதலின் குளிர்ந்த தண்ணளியுடையவனாயினன். தரணி முழுவதுக்கும், அதன்கண் வாழும் உயிர்களுக்கும் உயிருக்கு உயிராய் நெருங்கியிருந்து இன்புறுத்துவான் என்க.

(அ. சி.) கண்ணியன் - பெருமை உடையவன். தண்ணியன் - இரக்கமுடையவன். அண்ணியன் - அருகில் இருப்பவன்.

(25)


1. அவையேதானே. சிவஞானபோதம், 2.

2. அறவாழி. திருக்குறள், 8.