517
 

1325. ஆமே சதாசிவ நாயகி யானவள்
ஆமே அதோமுகத் துள்ளறி வானவள்
ஆமே சுவையொளி யூறோசை 1நாற்றம்
ஆமே யனைத்துயிர் தன்னுளு மாமே.

(ப. இ.) எல்லாவற்றையும் திருவுள்ளத்தால் படைத்தருளும் சதாசிவ நாயகியானவள். தூவாமாயையிற் காணப்படும் ஊழி, ஊழ், உழைப்பு, உணர்வு, உள்ளன்பு, உழைப்பி, உறழ்வு என்னும் ஏழு மெய்கட்கும் அறிவாயிருப்பள். ஊழி - காலம். உள்ளன்பு - விழைவு. உழைப்பி - ஆள். உறழ்வு - மருள். மூலப்பகுதியிற் காணப்படும் சுவையொளி யூறு ஓசைகட்கு இயக்கியாயுள்ளவள். எல்லாவுயிர்க்கும் உயிர்க்குயிராய் நின்று இயைந்து இயக்கும் இறைவியாவள்.

(அ. சி.) அதோமுகத்துள் ளறிவானவள் - அதோமுகத்தில் ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் உயிர் வருக்கங்களுக்கு அறிவாய் விளங்குபவள்.

(32)

1326. தன்னுளு மாகித் தரணி முழுதுங்கொண்டு
என்னுளு மாகி இடம்பெற நின்றவள்
மண்ணுளும் நீரனல் காலுளும் வானுளுங்
கண்ணுளும் மெய்யுளுங் காணலு மாமே.

(ப. இ.) திருவருளம்மை எல்லாவுலகங்களையும் தன்னுள் அடக்கித் தானாகவே நிற்பள். எளியேன் உள்ளும் எளியேன் தங்குதற்கு இடமும் ஆகிநின்றவளும் அவளே. அவளே நிலம், நீர், நெருப்பு, உயிர், நீள் விசும்பாகவும் விரிந்து நின்றனள். அடியேன் கண்ணுளும் மெய்யுளும் கலந்து நிற்பவளும் அவளே. அவள் அருளாலே 'கண்ணால் யானும் கண்டேன் காண்க' எனக் கட்டுரைக்குமாறு வெளிப்பட்டுக் காட்சியருள்பவளும் அவளே. மெய்ப்பொருளாகிய சிவனார் திருஉள்ளத்திருப்பவளும் அவளே என இவ்வகையாகக் கூறுதலும் ஒன்று.

(அ. சி.) தன் ... நின்றவள் - அண்டமும் பிண்டமும் ஆகி நின்றவள். மண் ... .ஆமே - ஐம்பூதங்களிலும் ஊனக்கண்ணிலும் தேகத்துள்ளும்.

(33)

1327. காணலு மாகுங் கலந்துயிர் செய்வன
காணலு மாகுங் கருத்து ளிருந்திடிற்
காணலு மாகுங் கலந்து வழிசெயக்
காணலு மாகுங் கருத்துற நில்லே.

(ப. இ.) திருவருள் வலத்தால் ஏனை உயிர்களுடன் நீ கலந்து அவை செய்வனவற்றைக் காணுதலும் ஆகும். அவ் வுயிர்கள் தம் கருத்தின்கண் மறைவாக வைத்திருக்கும் பொருள்களை நின்னால் அறிதலும் கூடும். அவ் வுயிர்களுடன் கலந்து அவற்றைக்கொண்டு நாம் விரும்பியவாறு தொழில் செய்வித்தலும் கூடும். அதனால், திருவருளின் திருவுள்ளப்பாங்கின்வழி ஒழுகுவாயாக.

(34)


1. சுவையொளி. திருக்குறள், 27.