(ப. இ.) தோழமை நெறியாகிய சகமார்க்கத்தில் சமாதியாகிய நிட்டையிலிருப்போர்க்கு, அவர் உள்ளத்தின்கண் திருவருட்கண்ணால் பரந்த உலகங்கள் காணப்படும். அதுபோல் உள்ளொளியாகிப் பேரொளி தோன்றும். அவ் வுள்ளத்தின்கண் திருவருளம்மை காட்சியருள்வள். இச் சமாதியின் உயர்ந்தோர் அனைத்துச் சித்தியும் அடைவர். அவர்களே சித்தரெனப்படுவர். (அ. சி.) யோகச் சமாதி - சகமார்க்கம். (3) 1464. யோகமும் போகமும் யோகியர்க் காகுமால் யோகஞ் சிவரூபம் உற்றிடும் உள்ளத்தோர் போகம் புவியிற் புருடார்த்த சித்தியது ஆகும் இரண்டும் அழியாத யோகிக்கே.1 (ப. இ.) அகத் தவமாம் யோகமும் அதன் புறப்பொலிவாம் போகமும் யோகியர்க்கு எய்துவன. அகத்தவம் சிவவடிவம் எய்துதல். புறப் பொலிவு நம்பி ஆரூரரும் நங்கை பரவையாரும் போன்று சிவத்தொண்டு மறவாச் சீர்மையுடன் அனைத்துயிர்க்கும் அருள்தாங்கி இம்பர்மனைத் தவம்புரிதல். இதுவே உயிர்க்கு உறுதிதரும் அறம், பொருள், இன்பம், வீடுபேறென்னும் நிலை எய்துவதற்கு வாயிலாகும். இவ்விரு நிலையும் அழியாச் செவ்விசேர் யோகியர்க்கு ஒருங்கு எய்துவன. அழியாத யோகியர் சிவவடிவம் எய்திய உள்ளத்தராவர். (அ. சி.) புருடார்த்தம் - அறிவு, பொருள், இன்பம், வீடு. இரண்டு - யோகம், போகம். (4) 1465. ஆதார சோதனை யானாடி சுத்திகள் மேதாதி யீரெண் கலந்தது விண்ணொளி போதா லயத்துப் புலன்கர ணம்புந்தி சாதா ரணங்கெட லாஞ்சக மார்க்கமே.2 (ப. இ.) ஆறு ஆதாரங்களையும் திருவருள் துணையால் கண்டு மேல்நோக்குதல் நாடி சுத்திகளாகும். சுத்தி - உண்மையோர்தல். மேதை முதலேழ் முதற் பொருள்களும் பதினாறு கலைகளும் கலந்த கலப்பும், பரவெளிப் பரப்பும், அறிவுநிலையத்துள் காணப்படும் ஐம்புலன் அந்தக் கரணம் நான்கு ஆகியவைகளும் ஆய்தல் சீல நிலையினைத் தாண்டுதல். இவை தோழமை நெறியாகும். ஏழ் முதற் பொருள்கள் சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, எலும்பு, மூளை, வெண்ணீர் என்பன. இவற்றை இரசம், இரத்தம், மாமிசம், மேதசு, அத்தி, மச்சை, சுக்கிலம் எனவுங் கூறுப. முதற்பொருளைத் தாது என்ப. (அ. சி.) மேதாதி - மேதை முதலிய தாதுக்கள். ஈரெண் - பதினாறு கலைகள். விண்ணொளி - சூரிய சந்திர ஒளி. போதாலயம் - ஞான ஆலயம். சாதாரணம் - சீவ இயல்பு. (5)
1. தென்னாவ. 12. தடுத்தாட்கொண்ட, 181. " நாடுகளிற். சிவஞானசித்தியார், 10. 2 - 3. " போகியா. சிவஞானசித்தியார், 1. 2 - 22. 2. மேதாதி. 10. திருமந்திரம், 1046.
|