குழியாகிய கருக்குழியில் வீழ்வர். அங்ஙனம் வீழ்ந்து பிறப்பதால் மனைவி மக்கள் என்னும் பாசத்திலுற்றுத் தடுமாறுவர். இதுவே உள்ளம் நடுங்கி உலைதற்கு வழியாகும். முக்கூறு: புறப்புறம், புறம், அகப்புறம். (1) 1504. ஆறு சமய முதலாஞ் சமயங்கள் ஊற தெனவும் உணர்க உணர்பவர் வேற தறவுணர் வார்மெய்க் குருநந்தி யாறி யமைபவர்க் கண்ணிக்குந் தானே. (ப. இ.) ஆறுசமயம் முதலாகச் சொல்லப்படுகின்ற சமயங்களனைத்தும் பிறப்பற்றுச் சிறப்புற்றுப் பேரின்பம் எய்தலுறுவார்க்கு இடையூறாகும் என உணர்க. அங்ஙனம் மெய்ம்மையுணர்பவர் அச் சமயங்கட்கு வேறாகிய சித்தாந்தச் செந்நெறியினைத் திருவருள் துணையால் நன்றாக உணர்வர். உணரவே நந்தியாகிய சிவகுரு வெளிப்பட்டு வந்து அருமறை1 அருள்வன். அருளவே அவ் வருள் பெற்றார் ஆறியமைவர். அத்தகையோர்க்குச் சிவன் அணுக்கமாய் இன்புறுத்தியருள்வன். அருமறை - குருமொழி; உபதேசம். (சிவயநம). (2) 1505. உள்ளத்து ளேதான் கரந்தெங்கும் நின்றவன் வள்ளற் றலைவன் மலருறை மாதவன் பொள்ளற் குரம்பை புகுந்து புறப்படுங் கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே.2 (ப. இ.) ஆருயிரின் நெஞ்சினுள்ளே மறைந்து எங்கும் நீக்கமற நிறைந்துநின்றவன், வள்ளலாகிய முதல்வன். அவன் உச்சிக்கு அப்பால் அருள் வெளியில் காணப்படும் ஆயிரவிதழ்த் தாமரையில் வீற்றிருந்தருளும் அம்மையோடு கூடிய அப்பன். அவன் ஒன்பது ஓட்டைகளையுடைய நிலையில்லாத இவ் வுடலில் புகுந்து நின்றனன். இங்கிருந்து ஆருயிர்களின் செவ்விநோக்கி வெளிப்படுபவன் கள்ளத்தலைவனாகிய மறையோன். அவனது மெய்ம்மைக் கருத்தினை எவரும் எளிதாக அறியமாட்டார்கள் என்க. (அ. சி.) பொள்ளல் - ஒன்பது ஓட்டைகள் உள்ள. மலர் உறை மாதவன் - உள்ளத் தாமரையில் வீற்றிருப்பவன்; 'மலர்மிசை ஏகினான்' இதன் வழித்து. (3) 1506. உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க் குள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க் குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே.3
1. பெருமலை. 12. சம்பந்தர், 42. 2. கள்ளத். திருவருட்பயன்; 10. அணைந், 10. " வெள்ளநீர்ச். அப்பர். 4. 75 - 9. 3. ஆக்கிலங். திருவுந்தியார், 9. " உண்டெனி. திருக்களிற்றுப்படியார், 36. " தெய்வம், குமரகுருபரர், நீதிநெறி விளக்கம், 74.
|